சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட குடும்ப சங்கம நிகழ்ச்சியில், உறுப்பினர்கள் உற்சாகத்துடன் சந்தித்து அளவளாவிக் கொண்டனர்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
குடும்ப சங்கமம்:
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உறுப்பினர் குடும்ப சங்கம நிகழ்ச்சி, இம்மாதம் 05ஆம் தேதி சனிக்கிழமை 19.00 மணிக்கு, சிங்கப்பூர் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நடைபெற்றது.
அன்று மாலையில் 17.00 மணிக்கே உறுப்பினர்கள் நிகழ்விடம் வரத் துவங்கினர். ஹாஃபிழ் செய்யித் இஸ்மாஈல் கிராஅத் ஓதி நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். இந்நிகழ்வு வெறுமனே குடும்ப சங்கம நிகழ்வாக மட்டும் நடத்தப்பட்டதால், நிகழ்ச்சி நிரல் என எதுவும் தயாரிக்கப்படவில்லை.
சிறப்பழைப்பாளர் அறிமுகம்:
காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர் முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். அவரையும், அவரது சேவைகளையும் நிகழ்வில் கலந்துகொண்டோருக்கு அறிமுகப்படுத்தி, மன்றத்தின் சேவைகளை சிறப்பழைப்பாளருக்கு விளக்கியும் - மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் பேசினார்.
மன்றத்தின் சேவைகள் குறித்து கேட்டறிந்த சிறப்பழைப்பாளர், அவற்றை - குறிப்பாக காயல்பட்டினத்திலுள்ள உழைக்கவியலாத - ஏழை எளிய - நிராதரவான குடும்பங்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய சமையல் பொருளுதவியின் மகத்துவம் குறித்து புகழ்ந்து பேசினார்.
சிற்றுண்டியுபசரிப்பு:
பின்னர், உறுப்பினர்கள் மற்றும் அவர்கள்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் - மன்ற உறுப்பினர் ஜவஹர் இஸ்மாஈல் அனுசரணையில், சிற்றுண்டி பரிமாறப்பட்டது.
குழந்தைகள் விளையாட்டு:
சங்கம நிகழ்விடம் வந்த நிமிடம் முதலே குழந்தைகள் கடற்கரைப் பூங்காவில் துள்ளித் திரிந்து விளையாடத் துவங்கிவிட்டனர்.
செயலர் சுருக்கவுரை:
பின்னர், கடந்த 2012ஆம் ஆண்டில் - நகர்நலனுக்காக மன்றத்தால் செய்து முடிக்கப்பட்ட நலத்திட்டப் பணிகளின் சாராம்சத்தையும், 2013ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் செய்ய திட்டமிடப்பட்டுள்ள பணிகள் குறித்தும் மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் சுருக்கமாக விளக்கிப் பேசினார்.
ஆலோசகர் சுருக்கவுரை:
மன்றத்தின் புதிய உறுப்பினர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு, மன்றத்தால் பெறப்படும் நிதியாதாரங்கள் குறித்த விபரங்களையும், நகர்நலனுக்காக அவை எவ்வாறு செலவழிக்கப்படுகின்றன என்ற விபரங்களையும், தேவையுடையோரிடமிருந்து உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் முறைகள் குறித்தும் மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் கூட்டத்தில் விளக்கினார்.
அடுத்த பொதுக்குழுவிற்கு ஆயத்தம்:
நடப்பு செயற்குழுவின் பொறுப்புக் காலம் இவ்வாண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. மன்றத்தின் புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் குறித்த விபரங்கள் இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும் என்றும், புதிய செயற்குழுவில் அங்கம் வகித்து நகர்நலப் பணிகளாற்றிட அனைத்து உறுப்பினர்களும் ஆர்வமுடன் ஆயத்தமாகுமாறும் ஒன்றுகூடலின்போது தெரிவிக்கப்பட்டது.
உறுப்பினர்கள் திருமண அழைப்பு:
பின்னர், விரைவில் மணவிழா காணவுள்ள மன்ற உறுப்பினர்கள் ஹாஃபழ் எம்.ஆர்.ஷெய்க் அப்துல் காதிர் ஸூஃபீ, காதிர் ஸாஹிப் அஸ்ஹர் ஆகியோர் தமது திருமண நிகழ்வுகளில் குடும்பத்தினருடன் கலந்துகொள்ள வருமாறு உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தனர்.
உண்டியல் வினியோகம்:
அதனைத் தொடர்ந்து, அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் - நகர்நல நிதி பெறுவதற்கான உண்டியல் வழங்கப்பட்டது.
அரட்டை:
இவ்வாறாக சுருக்கமாக நிகழ்வுகள் அமைந்திருந்தன. பின்னர், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சந்தி்ததுக்கொண்ட உறுப்பினர்கள் தமக்குள் உற்சாகத்துடன் மகிழ்ச்சிகளைப் பரிமாறிக்கொண்டு, அரட்டையிலும், விளையாட்டுக்களிலும் மூழ்கினர்.
அஸ்ர் - மஃரிப் - இஷா தொழுகைகள் நிகழ்விடத்திலேயே கூட்டாக (ஜமாஅத்தாக) நிறைவேற்றப்பட்டது.
இரவுணவுபசரிப்பு:
பின்னர், அனைவருக்கும் மீன் உணவுப் பதார்த்தங்களுடன் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது. இக்குடும்ப சங்கம நிகழ்வில் மன்ற உறுப்பினர்கள் பலர் தம் குடும்பத்தினருடன் திரளாகக் கலந்துகொண்டனர். இரவு 21.00 மணியளவில் அனைவரும் தமதில்லம் திரும்பிச் சென்றனர்.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |