காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ (மஸ்தான் ஹஸ்ரத்) - இன்று நள்ளிரவு 02.00 மணியவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.
21.12.2012 வெள்ளிக்கிழமை (இன்று) காலை 09.00 மணியளவில் கடையநல்லூர் புதுப்பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அதன் பின்னர் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த மார்க்க அறிஞரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், இறைவேண்டல் செய்யுமுகமாகவும் - ஹாங்காங் சுன்னத் வல் ஜமாஅத் பேரவை சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
நாடறிந்த மார்க்க மேதையும், மார்க்கப் பணி மற்றும் சமுதாயப் பணிகளில் தம்மை முழுமையாக அர்ப்பணித்தவரும், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வரும், சுன்னத் வல் ஜமாஅத்தின் முக்கிய தூணாகவும் விளங்கிய - கண்ணியத்திற்குரிய மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ அவர்களின் மறைவையொட்டி, ஹாங்காங் சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் சார்பில், 29.12.2012 சனிக்கிழமை இஷா தொழுகைக்குப் பின், ஹாங்காங் - கவ்லூன் மஸ்ஜித் சமுதாயக் கூடத்தில், இறைமறையோதப்பட்டு, அன்னாரின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டதுடன், இரங்கல் கூட்டமும் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலோர் கலந்துகொண்டு, மர்ஹூம் அவர்களின் மஃபிரத் - பாவப் பிழைபொறுப்பிற்காக துஆ இறைஞ்சினர்.
ஹாங்காங் - இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன் முன்னாள் தலைவர் ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் நிகழ்வுக்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். நிகழ்வில் கலந்துகொண்டோர் இறைமறையோத - அதனைத் தொடர்ந்து திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.
பின்னர் துவங்கிய இரங்கல் கூட்டத்தில், மறைந்த மார்க்க மாமேதையின் சமுதாய - மார்க்கச் சேவைகள் குறித்து நினைவுகூர்ந்து உரைகளாற்றப்பட்டன.
மர்ஹூம் அவர்களின் மாணவரும், ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் இமாமுமான மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ, ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன், ஹாஜி பல்லாக் அமீர் அப்துல்லாஹ் ஆகியோர் மர்ஹூம் அவர்களின் வாழ்க்கைச் சரிதங்களை நினைவுர்ந்து உரையாற்றினர்.
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் பத்ர் ஸஹாபாக்கள் திருநாமங்கள் அடங்கிய அட்டை - இமாம் அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் B.S.அஹ்மத் ஸாலிஹ்
கவ்லூன் - ஹாங்காங் |