சஊதி அரபிய்யா - மக்கா - புனித உம்ரா கடமைதனை நிறைவேற்ற குடும்பத்துடன் மக்கா வந்திருந்த வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி நிறுவனர் மற்றும் முன்னாள் நகரத்தந்தை வாவு எஸ்.செய்யிது அப்துர்ரஹ்மான் ஹாஜியார் அவர்கள் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தினரை மக்காவில் சந்தித்து கலந்துரையாடினார்.
வாவு எஸ்.செய்யிது அப்துர்ரஹ்மான் ஹாஜி அவர்கள் உம்ரா நிறைவேற்ற மக்கா வந்திருப்பதையொட்டி ஜித்தா காயல் நற்பணி மன்றத்தினரின் சிறப்பு சந்திப்பு மக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஜனவரி 02 புதன் 2013 அன்று மக்கா அஜீசிய்யாவிலுள்ள ஜித்தா மன்றத்தின் செய்தி தொடர்பாளர் சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ் இல்லத்தில் இஷாவுக்கு பின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அச்சிறப்பு அமர்வுக்கு மன்றத்தலைவர் குளம் எம்.எ.அஹ்மது முஹ்யித்தீன் தலைமை தாங்கினார். சகோ.அல்ஹாஃபிழ் வாவு எஸ்.எ.மொகுதூம் இர்ஃபான் இறைமறை ஓதினார்.
அமர்வுக்கு வந்திருந்தோரை வரவேற்று தலைமையுரையாற்றிய சகோ.குளம் எம்.எ.அஹ்மது முஹ்யித்தீன்; 'இக்ரஃ' எனும் கல்வி அமைப்பு மற்றும் 'ஷிஃபா' எனும் மருத்துவ அமைப்பு குறித்த செய்திகளை விபரமாகத்தந்தார்.
மன்றச்செயலர் சகோ.எம்.எ.செய்யிது இப்ராஹீம்; மன்றத்தின் மக்கள் நலப்பணிகள் மன்றப்பணிகள் குறித்த அறிமுக உரையை சுருக்கமாக தந்தார். மேலும்; 'உரிய தருனத்தில் நம் நகர் மகளிர்க்கு சிறந்ததொரு கல்லூரியை தந்த கண்ணியத்திற்குரிய வாவு செய்யிது அப்துர்ரஹ்மான் ஹாஜி அவர்கள், பல பொதுநலப் பணிகளையும் தன்னலம் பாராது செய்து வரும் செய்திகள் குறித்து நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் என்றும்; அவர்கள் ஆற்றும் நலச்சேவைகளை நினைவு கூறும் இத்தருனத்தில் உங்களைப்போன்ற புரவலர்கள் செய்யும் நகர் நலப்பணிகள் எங்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் ஒரு உத்வேகமாகும் இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்றும்; நம் நகர் நலனில் அக்கறை கொண்டு பொதுப்பணிகள ஆற்றும் தாங்கள் உள்பட அனைத்து பெரியவர்களும் பாராட்டுக்குரியவர்கள்' என்றார். மறுமையை மட்டுமே முன்னிறுத்தி இம்மன்றம் செய்யும் பணிகள் செவ்வனே நடந்தேற பிரார்த்திக்குமாறும், தாங்களின் மேலான அறிவுரையை எங்களுக்கு வழங்குமாறும் வேண்டிக்கொண்டார்.
இன்றைய தினம் எமது ஜித்தா காயல் நற்பணி மன்றம் 10 வயதை அடைந்துள்ளதென்றும், இந்நாளில் இந்நிகழ்வு நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறதென்றும், எம் மன்றப்பணிகளில் முழு மூச்சாக ஈடுபட்டு உழைத்த மற்றும் உழைக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கு நன்றி தெரிவித்து, பொதுப்பணிகளுக்கு மனமுவந்து தாராளமாக பொருளதவி தரும் மன்ற உறுப்பினர்களை பாராட்டினார் மன்றச்செயலர் சகோ.சட்னி எஸ்.எ.கே.செய்யது மீரான்.
தொடர்ந்து சில வார்த்தைகள் முன் வைத்த ஜித்தா தமிழ் மன்றத்தலைவர் மற்றும் ஜித்தா காயல் நற்பணி மன்ற மூத்த செயற்குழு உறுப்பினர் சகோ.எஸ்.மூஸா ஸாஹிப்; மகளிர் கல்வி மேம்பாட்டிற்கு தேவையான பல கருத்துக்களையும், அதன் நிமித்தம் செய்ய வேண்டிய சில நடைமுறை சாத்தியங்களையும் செய்திகளாக தந்தார். அது குறித்து நம் கல்லூரியின் பார்வை என்ன என்பதனை தெரியப்படுத்தும்படி வேண்டிய அவர், மகளிர் கல்வி முன்னேற்றத்திற்கான மேலும் பல உயரிய முயற்சிகளை உங்களைப்போன்ற நல்லுள்ளம் கொண்டோர் தாமதமின்றி எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
வாழ்த்துரை வழங்கியதோடு பல ஆக்கபூர்வமான தகல்வல்களை தந்த வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் வாவு எஸ்.செய்யிது அப்துர்ரஹ்மான் ஹாஜி அவர்கள், மகளிர் கல்வி மேம்பாடு குறித்த பல எதிர்கால செயல் திட்டங்கள் முன்வடிவு பெற்றுள்ளதாகவும், அதனை விரைந்து செயல்படுத்த நாடியுள்ளதாகவும் அதன் முன் முயற்சியாக 'மகளிர்கான ஆசிரியர் பயிற்சி மையம்' நம் கல்லூரியில் வளாகத்தில் இன்ஷாஅல்லாஹ் துவங்க உள்ளதாவும், நம் கல்லூரி நிர்வாகம் நம் நகர் மகளிர்க்கான கல்வி மேம்பாடு குறித்த தொலைநோக்கு திட்ட முறைகளை நெறிபடுத்தி, வரும் காலங்களில் தேவைக்கேற்ப நடைமுறைபடுத்த உளதாகவும்' தெரிவித்தார்.
மேலும் நம் கல்லூரியின் மகளிர்க்கான சிறப்பம்சம் யாதெனில், மணமுடித்த மாணவிகள் திருமணத்திற்கு பிறகு மீண்டும் படிப்பை தொடர உரிய வசதிகள் செய்து தரப்பட்டிருப்பாதகவும், ஆகையால் திருமணமாகிவிட்டதே இனி எங்கே கல்லூரி செல்ல என்று மாணவிகள் நினைக்க தேவையில்லை என்றும், தாரளமாக கல்லூரி வந்து படிப்பை தொடர்ந்து ‘பட்டம்’ பெறலாம் என்றும் கூறினார். மேலும் மகளிர்க்கு பிரத்தியேகமாக SPOKEN ENGLISH COURSE ம் நடத்தப்பட்டு வருகிறதென்றும், நம் நகர் மாணவிகள் படிப்பில் மிகுந்த ஆர்வம் செலுத்துகிறார்கள் என்றும், நம் மாணவிகளிடம் உள்ள அரிய திறமைகள் மற்றும் நுண்ணறிவுகளை நம் கல்லூரி வெளிக்கொணர்ந்து அதை உரிய முறையில் செயல்படுத்த ஆர்வமூட்டுகிறது என்றும் கூறினார். ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் மக்கள் நலப்பணிகளை வெகுவாக பாராட்டிய அவர், இம்மன்றத்தின் நகர் நலப்பணிகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற தான் வாழ்த்துவதாகவும் கூறி அமர்ந்தார்.
தாய்லாந்து காயல் நற்பணி மன்ற உறுப்பினர் வாவு முஹம்மது அலீ அவர்கள், அம்மன்றத்தின் நகர் நலப்பணிகள் குறித்த செய்திகளை சிறப்பாக தந்த அவர், ஜித்தா கா.ந. மன்றத்தின் செயல்பாடுகள் யாவும் தம்மை மிக கவர்ந்ததாகவும் கூறினார்.
வாவு எஸ்.செய்யிது அப்துர்ரஹ்மான் ஹாஜி அவர்களின் 'பொது நலச்சேவை' மற்றும் அவர்களின் 'நகர் நலன் அர்ப்பணிப்பு' ஆகிய நற்பணிகளை பாராட்டி அவர்களுக்கு ஜித்தா காயல் நற்பணி மன்றம் சார்பாக 'நற்சேவை விருது' வழங்கப்பட்டது.
கல்லூரி முதல் நகராட்சி வரை, பிரதான வீதி முதல் குறுகிய ஓடை வரை என அனைத்து செய்திகளும் சகோதரர்களால் வினாக்களாக தொடுக்கப்பட்டு விடைகளும் பெறப்பட்டு, கருத்துகள் பகிர்ந்து, கலந்துரையாடிய சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி, சகோ. சட்னி செய்யிது மீரான் நன்றி கூற, மன்றப் பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம் பிராத்திக்க துஆ கஃப்பாராவுடன் இனிதே முடிவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!
அமர்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் இரவு உணவு விருந்தளிக்கப்பட்டது.
குறுகிய கால நிலையில் ஏற்பாடு செய்யப்பட இந்த இனிய நிகழ்வை
சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ், சகோ,சீனா,எஸ்.எச்.மொஹ்தூம் முஹம்மது
மற்றும் சகோ.விளக்கு.எம்.டி.முஹம்மது அலி (VP) ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
தகவல் மற்றும் படங்கள்:
சட்னி,எஸ்.எ.கே.செய்யது மீரான்
அரபி,எம்.அய்.முஹம்மது ஷுஅய்ப்,
ஜித்தா, சஊதி அரபிய்யா
|