காயல்பட்டினத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு,கோமான் ஜமாஅத் சார்பில் 50 சென்ட் நிலம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திட்டத்தின் கீழ், காயல்பட்டினம் கோமான் தெருவில் தாற்காலிக கட்டடத்தில் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட தொடங்கியது.
இந்த நிலையத்துக்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு 50 சென்ட் நிலம் நன்கொடையாக வழங்கப்படுமென கோமான் ஜமாஅத் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
கடந்த 08 ஆம் தேதி அதற்கான இடம் முறையாக சர்வே செய்யப்பட்டு, கடந்த 11ஆம் தேதி தமிழக ஆளுநர் பெயருக்கு கோமான் ஜமாஅத்தினரால் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
இப்பத்திரத்தை முறைப்படி மாவட்ட சுகாதாரத் துறையிடம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நகராட்சி 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் வரவேற்றார். காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையர் ஜி.அஷோக் குமார் வாழ்த்திப் பேசினார்.
பத்திரத்தை, கோமான் மொட்டையார் பள்ளி ஜமாஅத்தின் தலைவர் சுல்தான் ஜரூக், மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் எஸ்.ராஜசேகரனிடம் வழங்கினார்.
மாவட்ட சுகாதாரத் துறையின் நேர்முக உதவியாளர் காதர்ஷா, காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஜே.சிவசோமனா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆர்.சுப்ரமணியம், கோமான் ஜமாஅத்தின் துணைத் தலைவர் எம்.ஒய்.காஜா முஹைதீன், செயலர் ஜனாப் ஜே.ஏ.செய்யது முஹம்மது, பொருளாளர் காசீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நன்றி:
தினமணி நாளிதழ் |