முஸ்லிம் சமுதாயத்தின் நலிந்தோர் முன்னேற உதவிடுமாறு, தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்க கவுரவ செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
முஸ்லிம்கள் தங்கள் வாழ்கை தரத்தில் மிகவும் பின்தங்கி இருக்கின்றார்கள் என்பதற்காக 1892ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம், ஆரம்பத்தில் சென்னை மாகானத்தில் மட்டும் செயல்பட்டு வந்தது. பின்னர் 2007ஆம் ஆண்டு முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் இவ்வமைப்பு விரிவுபடுத்தப்பட்டது.
இந்த அமைப்பின் தலைவராக அந்தந்த மாவட்டத்தின் ஆட்சியர்கள் (கலெக்டர்) செயல்படுவார்கள். இவ்வமைப்பு நமது மாவட்டத்தில் துவங்கப்பட்ட முதல் வருடத்தில் 10,000 ரூபாய்கள் மட்டுமே திரட்டப்பட்டு அதற்கு இணையான 10,000 ரூபாயை அரசிடம் இருந்து பெற்று 4 நபர்களுக்கு கிரைண்டர் வழங்கப்பட்டது.
இரண்டாவது முறையாக பெரும் முயற்சி செய்ததின் மூலம் 7.12 லட்சம் நிதி திரட்டி, அதன் மூலம் 118 நபர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 29ஆம் தேதி 7.12 லட்சம் அரசிடமிருந்து இணைநிதி பெற்று 144 பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அடுத்து நிதி திரட்டும் முயற்சியாக 06.01.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 05:30 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளி வளாகத்தில் அவ்வமைப்பின் கவுரவச் செயலாளர் வஹிதா தம்பி அவர்களால் கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்திற்கு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமை தாங்கினார். ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துவக்கமாக ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை இறைமறை வசனத்தை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து வரவேற்புரையையும், கூட்டம் குறித்த நோக்கத்தையும் காயல்பட்டினம் நகராட்சியின் முன்னால் தலைவியும், தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் கவுரவ செயலாளருமான வஹிதா தம்பி அவர்கள் விளக்கிப் பேசினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-
இத்திட்டத்தின் கீழ் நாம் உதவும்போது, நம் சமுதாயத்திற்கு உதவுகின்றோம் என்ற உயரிய நோக்கத்துடன் நாம் நிதிகளை வழங்க முன்வர வேண்டும். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் ஊர்களிளும் உள்ளவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதற்கான நிதியின் பெரும்பகுதியை நம் நகரில் இருந்தே பெற்று வருகிறோம். கடந்த முறை மற்ற ஊர்களில் இருந்து சிலர் இதற்காக நிதி வழங்கினர்.
நமது அண்டை ஊரான ஆத்தூரில் மிகவும் ஏழ்மை நிலையில், அதிகமான நம் சமுதாய மக்கள் உள்ளனர். அவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் உதவலாம். கடந்த முறை 144 நபர்களுக்கு உதவி வழங்கப்பட்டதில் 99 நபர்கள் நமதூரைச் சேர்ந்தவர்கள்.
இத்திட்டத்திற்கு கடந்த காலங்களில் நாம் வழங்கிய தொகைக்கு இணையான ஒரு மடங்கு தொகையே வழங்கப்பட்டு வந்தது. இவ்வாண்டு முதல் அரசு இரண்டு மடங்கு தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளது. தற்போது நாம் 10 லட்சம் ரூபாய் நிதியினை திரட்டி கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இன்ஷாஅல்லாஹ் இத்தொகையினை நாம் கொடுத்தால், அரசிடமிருந்து 20 லட்சம் ரூபாய் என மொத்தம் 30 லட்சம் ரூபாயைப் பெற்று பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கலாம்.
கடந்த ஆண்டு இவ்வமைப்பின் மூலம் அதிக உதவிகள் செய்த மாவட்டங்களைத் தெரிவு செய்து விருதுகள் வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்டதில் தமிழகத்தில் முதல் இடத்தினை தேனி மாவட்டம் பெற்றது. இரண்டாவது இடத்தினை நம் மாவட்டம் பெற்றுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறேன்.
இவ்வமைப்பின் மூலம் தையல் மிஷின், கிரைண்டர் (மாவு அரைக்க), மிக்ஸி (குளிர்பானம் கடை வைக்க, மிளகாய் அரைக்க), அரசு உதவி பெறாத விதவைகளுக்கு உதவித் தொகை வழங்குதல், மருத்துவ உதவி, காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்த்தல், மறுமணம் / திருமண உதவி, கல்வி உதவி (பாட புத்தகங்கள் வாங்க), கழிப்பறை வசதி உதவி, சிறு C.F.L. விளக்கு அமைத்தல் வசதி, சிறு வாகனம் மற்றும் தொழிற் கருவிகள், உடல் ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வாகனம், பாய் நெய்தல், பானைகள் செய்தல், சுய உதவிக் குழுக்கள் அமைப்பதற்கு மற்றும் கடனுதவி பெற்றிட உதவி செய்தல், அரசு உதவிகள் பெற்றுத் தருதல், ஆகியன நிர்வாக குழுவின் ஒப்புதலுடன் மேற்கூறிய உதவிகள் மற்றும் இதர உதவிகள் வழங்கலாம்.
இன்று (06/01) மாலை நடைபெற்ற கூட்டத்தில் இவ்வகைக்காக 2,29,000 ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி மாதத்திற்குள் நாம் திட்டமிட்டுள்ளபடி 10 லட்சம் ரூபாயை இன்ஷாஅல்லாஹ் அரசிடம் ஒப்படைக்கவும், மேலும் நம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் அனைவரும் உதவ வேண்டுகிறேன்.
இவ்வாறு, முஸ்லிம் மகளிர் உதவும் சங்க கவுரவ செயலாளர் அ.வஹீதா தம்பி உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், தாய்லாந்து காயல் நல மன்ற செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத், ஹாஜி வாவு நாஸர், ஹாஜி ஜெஸ்மின் கலீல், ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, ஹாஜி எஸ்.எம்.உஸைர், ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத், ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம் ஆகியோருட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
இத்திட்டத்திற்கு உதவ விரும்புவோர்
அ.வஹிதா தம்பி அவர்களை
+91 9894 842 238 என்ற எண்ணிலும்,
ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கதுல்லாஹ் (ஹாஜி காக்கா) அவர்களை
+91 9382 812 954 என்ற எண்ணிலும்
தொடர்புகொண்டு தங்களால் இயன்றளவு உதவிகளை நம் சமுதாயத்திற்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் உதவி:
M.ஜஹாங்கீர் |