திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, காயல்பட்டினம் இரட்டை குளத்துப் பள்ளி மையவாடி வளாகத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு, கடந்த 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு, 27.01.2011 அன்று திறந்து வைக்கப்பட்டது.
அதுபோல, காயல்பட்டினம் மகுதூம் பள்ளி மையவாடியில், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு, கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதவாக்கில் செயல்படத் துவங்கியது. பின்னர் சில நாட்களிலேயே இத்தொட்டியின் செயல்பாடு நின்றுபோனது.
அன்று முதல் இவ்விரு ஜமாஅத்துகளின் சார்பில் காயல்பட்டினம் நகராட்சியிடம் அவ்வப்போது முறையிடப்பட்டும் இன்று வரை இத்தொட்டிகள் செயல்படா நிலையிலேயெ உள்ளன.
இந்நிலையில், 06.01.2013 ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் காயல்பட்டினம வந்த திருச்செந்தூா சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு காயல்பட்டினம் ஜலாலிய்யா ஜமாஅத் சார்பில் மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டை குளத்துப் பள்ளி வளாகத்திலும், மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில் ஃபாயிஸீன் சங்க வளாகத்திலும் வரவேற்பளிக்கப்பட்டது.
அவரது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் கட்டப்பட்டுள்ள இவ்விரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளும் இன்றளவும் செயல்பாடற்று இருப்பது குறித்து அப்போது அவரிடம் முறையிடப்பட்டதுடன், உடன் வந்திருந்த காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார், நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் ஆகியோரிடம் இரு ஜமாஅத்தினரும் கேள்வியெழுப்பினர். விரைவில் நீர்த்தேக்கத் தொட்டிகளை இயங்கச் செய்ய ஆவன செய்வதாக அப்போது அவர்கள் கூறினர்.
காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், உறுப்பினர்களான பி.எம்.எஸ்.சாரா உம்மாள், எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ரெங்கநாதன் என்ற சுகு, ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி ஆகியோருட்பட பலர் இந்நிகழ்வுகளின்போது உடனிருந்தனர்.
பின்னர், காயல்பட்டினம் நகராட்சிக்கு நேரடியாக வந்த ஜலாலிய்யா ஜமாஅத்தினர், நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமாரிடம் இது தொடர்பான மனுவை நேரடியாக அளித்தனர்.
படங்கள்:
A.K.இம்ரான் |