நியாய விலைக் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு குறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
2013ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் படியாக ஒரு கிலோ இலவச அரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையுடன், இதர பொங்கல் பொருட்கள் வாங்க 100 ரூபாயும் வழங்க, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் - அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு (Special Pongal Hamper Gift) வழங்கப்படவுள்ளது.
இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு அந்தந்தப் பகுதிகளின் நியாய விலைக் கடைகள் மூலம் 2013ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்படாத அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.
பொங்கலுக்கு முன்பாக இந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் சிறப்பு பொங்கல் பரிசு 09.01.2013 அன்று பிற்பகல் வழங்கி துவக்கப்படவுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்படவுள்ளது. இப்பணி, 09.01.2013 முதல் 13.01.2013 வரை (ஞாயிறு உட்பட) நடைபெறும்.
குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள நபர்களில் யார் பொருட்களை வாங்க வந்தாலும், அவரிடம் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு பை வழங்கப்படும்.
இதற்கு, பொதுமக்கள் கூட்ட நெரிசலைத் தவிர்த்து எளிதில் பெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |