காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இத்தொழிற்சாலையின் மாசு கட்டுப்பாட்டு விதிமீறல்களைக் கண்டித்தும், அதன் விரிவாக்கத் திட்டத்திற்கு அனுமதியளிக்கக் கூடாது என மத்திய - மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களை வலியுறுத்தியும், காயல்பட்டினம் உள்ளிட்ட - தொழிற்சாலையைச் சுற்றியுள்ள ஊர்களில், 2013 - ஜனவரி 15ஆம் தேதிக்குள் 1 லட்சம் கையெழுத்து சேகரித்தல் உட்பட சில தீர்மானங்கள் - 24.12.2012 அன்று காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் வட்டார நலக் கமிட்டியினர் - நகர்மன்ற அங்கத்தினர் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, 01.01.2013 அன்று நடைபெற்ற KEPA செயற்குழுக் கூட்டத்தில் ஒரு இலட்சம் கையெழுத்து சேகரிப்பதற்கான செயல்திட்டமும் வடிவமைக்கப்பட்டது.
அதன்படி, காயல்பட்டினத்தின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் கையெழுத்து சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதுபோல, மக்கள் திரளும் கடற்கரை, திருமண நிகழ்ச்சி நடைபெறுமிடங்கள் உள்ளிட்ட இடங்களிலும் கையெழுத்து சேகரிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுவட்டார ஊர்களில் - அங்குள்ள சமூக நல ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் கையெழுத்து சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, காயல்பட்டினத்திலுள்ள அனைத்து தெருக்களிலும் வீடு வீடாகச் சென்று கையெழுத்து சேகரிக்க மகளிர் தன்னார்வலர்களைப் பயன்படுத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. 06.01.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணியளவில், மகளிர் தன்னார்வலர்கள் ஒன்றுகூட்டப்பட்டு, பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் முறை பற்றி KEPA நிர்வாகிகளால் பயிற்சியளிக்கப்பட்டது. கையெழுத்து சேகரிக்க ஆர்வமுடன் தன்னார்வலர்களாக களப்பணியாற்ற இசைந்துள்ள அனைவரையும் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் நேரில் வாழ்த்தியதுடன், தன் சார்பிலும் தன்னார்வலர்களை ஏற்பாடு செய்துகொடுத்தார்.
தற்போது, காயல்பட்டினத்தின் அனைத்து தெருக்களிலும் மகளிர் தன்னார்வலர்களைக் கொண்டு கையெழுத்து சேகரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அவர்களின் நேரத்தை சேமிக்கும் வகையில், KEPAவின் அடையாள அட்டையை அணிந்து வரும் அவர்களை விரைவாக அடையாளங்கண்டு, தாமதமின்றி பொதுமக்கள் தமது கையெழுத்துக்களை அளிக்குமாறு KEPA சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. |