ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த ரயில் கட்டண உயர்வு ஜனவரி 21ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என ரயில்வேத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறியுள்ளார்.
மத்திய ரயில்வேத்துறை மத்தியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணி கட்சிகள் வசம் இருந்து வந்தது. இதனால் ரயில்வே கட்டணத்தை உயர்த்தவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் ரயில் கட்டணத்தை, ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதி உயர்த்தினார். இதனால் அவரது கட்சி தலைவர் மம்தா அதிருப்தியடைந்தார். ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும என்று விடாப்பிடியாக இருந்தார். இதனால் உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம் குறைக்கப்பட்டது. ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து தினேஷ் திரிவேதி நீக்கப்பட்டார். அவருக்கு பதில் திரிணமுல் கட்சியை சேர்ந்தவரே ரயில்வே அமைச்சராக பதவியேற்றார்.
இதன் பின்னர் ரயில்வே அமைச்சர் பதவி காங்கிரஸ் வசம் வந்தது. இதனையடுத்து ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்படும் என அமைச்சர்கள் கூறி வந்தனர். எப்போது உயர்த்தப்படும் என கூறப்படவில்லை. ரயில்வே துறை பயணிகள் கட்டண பிரிவில் ரூ.24,000 கோடி நஷ்டத்தை சந்தித்து வருவதாக மத்திய அரசு கூறி வந்தது.
இந்நிலையில் ரயில்வே கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ரயில்வே கட்டணங்கள் குறித்து அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ரயில் கட்டணங்கள் கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. தற்போது ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. ரயில்வே பாதுகாப்பு, சுகாதார வசதிகளை கருத்தில் கொண்டும், 6வது சம்பள கமிஷன் காரணமாகவும் ரயில்வே கட்டணம் உயர்த்தப்படுகிறது. ரயில்வே பட்ஜெட்டில் ரயில் கட்டணம் உயர்த்தப்படாது. ரயில் கட்டண உயர்வு மூலம் 12 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என கூறினார். இந்த கட்டண உயர்வு ஜனவரி 21ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது எனவும் கூறினார்.
இதன்படி,
ஏசி முதல் வகுப்புக்கான ரயில் கட்டணம் கி.மீ., க்கு 10 பைசாவும்,
இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் கி.மீ.,க்கு 2 பைசாவும்
தூங்கும் வசதி கொண்ட ரயில் கட்டணம் கி.மீ.,க்கு 6 பைசாவும்,
ஏசி இருக்கை வசதி கொண்ட ரயிலுக்கான கட்டணம் கி.மீ.,க்கு 10 பைசாவும்,
ஏசி மூன்றடுக்கு ரயில் கட்டணம் கி.மீ.,க்கு 10 பைசாவும்,
ஏசி இரண்டடுக்கு ரயில் கட்டணம் கி.மீ.,க்கு 6 பைசாவும்,
எக்ஸ்பிரஸ் ரயில்களில் கிலோ மீட்டருக்கு 4 பைசாவும்
உயர்த்தப்படுகிறது.
நன்றி:
தினமலர் |