01.01.2013-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (ஜனவரி 10, 2013) அனைத்து வாக்காளர் பதிவு அதிகாரிகளாலும் வெளியிடப்பட்டது. இது குறித்த அரசு செய்திகுறிப்பு வருமாறு:
01.01.2013-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 1-10-2012 அன்று வரைவுப் பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க/நீக்க/திருத்த/இடம் மாற்றல் செய்ய விண்ணப்பங்கள் 2012 அக்டோபர் 1-ஆம் தேதியிலிருந்து நவம்பர் 20-ஆம் தேதிவரை பெறப்பட்டன.
1.10.2012 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 504.61 இலட்சம் (ஆண் வாக்காளர்கள் – 253.46 இலட்சம், பெண் வாக்காளர்கள் – 251.13 இலட்சம் மற்றும் இதரர் 2139) ஆகும்.
மேற்கண்ட சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட 23.6 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 22.07 இலட்சம் விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் வாக்காளர்களின் இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் வாக்காளர் பட்டியலில் ஒரே வாக்காளரின் பெயர் தவறாக ஒருமுறைக்குமேல் இடம்பெற்றிருப்பது ஆகியவற்றின் காரணமாக மேற்கண்ட சுருக்கமுறை திருத்த காலத்தின்போது 10.69 இலட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்காளர் பதிவு அதிகாரிகளாலும் இன்று (10.01.2013) வெளியிடப்பட்டது.
2013 சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் தற்போது 515.69 இலட்சம் வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் – 258.56 இலட்சம், பெண் வாக்காளர்கள் – 257.11 லட்சம் மற்றும் இதரர் 2433) பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில்
வெளிநாடுவாழ் வாக்காளர்களும் அடங்குவர். ஆகவே வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2013-இல் வாக்காளர் பட்டியலில் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிகர வாக்காளர்களின் எண்ணிக்கை 11.08 இலட்சம் ஆகும். உயரளவாக, காஞ்சிபுரம்
மாவட்டத்தில் 1,28,219 நிகர வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
2013 சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியல்படி, தமிழ்நாட்டின் மொத்த மக்கட்தொகையில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 69.22% ஆகும். இது, சென்சஸ் துறையின் கணக்கெடுப்பின்படி மொத்த மக்கட்தொகைக்கும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகைக்கும் உள்ள விகிதாச்சாரத்தை ஒத்திருக்கிறது.
வாக்காளர் பட்டியலில் 1000 ஆண்களுக்கு 994 பெண்கள் வீதமும், சென்சஸ் துறையின் கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகையில் 1000
ஆண்களுக்கு 995 பெண்கள் வீதமும் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் தற்போது பெயர் சேர்க்கப்பட்டுள்ள நபர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25, 2013 அன்று வாக்குச் சாவடி அமைவிடங்களில் நடைபெறும் விழாக்களில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். பொதுமக்கள் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றதா என்பதை மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள மண்டல அலுவலகங்களிலும் மற்ற பகுதிகளிலுள்ள
வட்டாட்சியர் அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு அறியலாம். வாக்காளர் பட்டியல்களை
http://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம்.
தலைமைத் தேர்தல் அதிகாரி,
தமிழ்நாடு.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி – மக்கள் தொடர்புத் துறை, சென்னை - 9. |