பள்ளிக்கூடம் செல்லும் மாணவியர், தமது வார விடுமுறை நாட்களில் இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்வியைப் பெற்றிட வேண்டும் என்ற நோக்குடன், காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 09.30 மணி முதல் நண்பகல் 01.00 மணி வரை தீனிய்யாத் - மார்க்கக் கல்வி வகுப்புகள் பல்லாண்டு காலமாக நடத்தப்பட்டு வருகிறது.
இம்மாணவியரை ஊக்குவிக்கும் வகையில், அவ்வப்போது பல்சுவைப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கி மகிழ்விக்கப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், “திறமைக்கு ஒரு சவால்” என்ற முழக்கத்துடன், இக்கல்லூரியின் ரவ்ழா, கவ்ஸர், நஈம், ரய்யான், ஸித்ரத்துல் முன்தஹா, அத்ன், அஃலா, ஃபிர்தவ்ஸ் ஆகிய 8 வகுப்புகளில் பயிலும் மாணவியருக்கான பல்சுவைப் போட்டிகள் 2012 டிசம்பர் மாதம் 28, 29, 30 தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) நடைபெற்றது.
“நன்மை தரும் நற்குணங்கள்” என்ற தலைப்பில் - ரவ்ழா வகுப்பு மாணவியருக்கும்,
“பெற்றோரைப் பேணுவோம்” என்ற தலைப்பில் - கவ்ஸர் வகுப்பு மாணவியருக்கும்,
“குர்ஆன் கூறும் பிரார்த்தனைகள்” என்ற தலைப்பில் - நஈம் வகுப்பு மாணவியருக்கும்,
“சாதனை படைத்த ஸஹாபாக்கள்” என்ற தலைப்பில் - ரய்யான் வகுப்பு மாணவியருக்கும்
பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது.
ஸித்ரத்துல் முன்தஹா, அத்ன், அஃலா, ஃபிர்தவ்ஸ் ஆகிய மேனிலை வகுப்பு மாணவியருக்கு குர்ஆன் மனனம் மற்றும் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டது.
அதுபோல, கல்லூரியில் மூன்றாண்டு பாடத்திட்டத்தின் கீழ் “ஆலிமா சித்தீக்கிய்யா” கல்வி பயிலும் மாணவியருக்கு துஆக்கள் மனனப் போட்டியும், “பெண் ஒழுக்கம் பற்றி இஸ்லாம்”, “குர்ஆனிய சமுதாயம்” ஆகிய தலைப்புகளில் பேச்சுப்போட்டியும் நடத்தப்பட்டது.
கல்லூரியின் திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் பிரிவு மாணவியருக்கு திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு) போட்டியும் நடத்தப்பட்டது.
போட்டிகளில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவியருக்கு சிறப்புப் பரிசுகளும், கலந்துகொண்ட மாணவியர் அனைவருக்கும் பங்கேற்புக்கான பரிசுகளும், ஆண்டிறுதித் தேர்வில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவியருக்கு ஊக்கப்பரிசுகளும் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
போட்டி ஏற்பாடுகளை, ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் நிர்வாகிகள், ரக்கீபாக்கள், முதல்வர் மற்றும் ஆசிரியையர் செய்திருந்தனர்.
படங்கள்:
உம்மு ஆஸியா |