காயல்பட்டினம் கடையக்குடியில், DCW தொழிற்சாலையின் தென்கிழக்குப் பகுதியில் ஆலையையொட்டி ஓடும் கழிவு நீரோடையில் DCW தொழிற்சாலையின் மூலம் இன்று காலையில் பொக்லைன் இயந்திரத்தின் துணையுடன் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுள்ளது.
இப்பணியை மேற்கொள்வதற்காக பொக்லைன் இயந்திரத்தை கடையக்குடி வழியாக கொண்டு சென்றபோது, கடையக்குடி பொதுமக்கள் வழிமறித்து, “நாங்க ஊரே சேர்ந்து போராடிக் கொண்டிருக்கும்போது, நீங்க ஏன் மீண்டும் மீண்டும் அங்கே சென்று வேலை செய்கிறீர்கள்?” என்று கேள்வி கேட்டதாகவும், அதற்கவர்கள் - தாங்கள் கழிவு நீரை கடலில் கலக்கப் போவதில்லை என்றும், கடல் நீர் தொழிற்சாலையின் புறவாயில் வரை இருக்குமாறு மட்டுமே வெட்டிவிடப் போவதாகக் கூறியதாகவும் தெரிகிறது.
இத்தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA சார்பில் நீரோடை கடலில் கலக்கும் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிடப்பட்டது. அப்போது, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் உறுப்பினர் காசிராஜன் மேற்பார்வையில், பொக்லைன் இயந்திரம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது நேரடியாக கண்டறியப்பட்டது.
அத்துடன், அந்த நீரோடை, அருகிலுள்ள ஊர்களின் விவசாயக் கழிவுநீர் என்று விளக்கும் வகையில் ஏற்கனவே அடையாளம் தெரியாதோரால் நிறுவப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையும் காணப்படவில்லை.
பின்னர், கலந்தாலோசனை செய்துகொண்ட KEPA நிர்வாகிகள் - அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கும் தொலைநகல் (ஃபேக்ஸ்) மூலம் இதுகுறித்து முறையிட்டுள்ளதுடன், உடனடியாக மேற்படி பணிகளைத் தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை அளித்துள்ளனர்.
கழிவுநீரோடையில் பணிகள் நடைபெற்றபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக! |