திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, காயல்பட்டினம் இரட்டை குளத்துப் பள்ளி வளாகத்தில், 1 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு, கடந்த 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு, 27.01.2011 அன்று திறந்து வைக்கப்பட்டது.
நீர்த்தேக்கத் தொட்டி முறைப்படி திறக்கப்பட்ட பிறகும், அதில் வினியோகத்திற்காக குடிநீர் ஏற்றப்படாததால் ஏமாற்றமுற்ற அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து காயல்பட்டினம் நகராட்சியிடம் அவ்வப்போது முறையிட்டு வந்தனர்.
06.01.2013 ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் காயல்பட்டினம வந்த திருச்செந்தூா சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு காயல்பட்டினம் ஜலாலிய்யா ஜமாஅத் சார்பில் மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டை குளத்துப் பள்ளி வளாகத்திலும், மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில் ஃபாயிஸீன் சங்க வளாகத்திலும் வரவேற்பளிக்கப்பட்டது.
அவரது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் கட்டப்பட்டுள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இன்றளவும் செயல்பாடற்று இருப்பது குறித்து அப்போது அவரிடம் முறையிடப்பட்டதுடன், உடன் வந்திருந்த காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார், நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் ஆகியோரிடம் முறையிடப்பட்டது. விரைவில் நீர்த்தேக்கத் தொட்டிகளை இயங்கச் செய்ய ஆவன செய்வதாக அப்போது அவர்கள் கூறினர்.
இந்நிலையில், ஜலாலிய்யா நீர்த்தேக்கத் தொட்டியில் வினியோகத்திற்காக இன்று குடிநீர் ஏற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து காயல்பட்டினம் நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸாரிடம் வினவுகையில், புதிதாக கட்டப்பட்ட இந்நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டால், ஏற்கனவே பல பகுதிகளுக்கும் வினியோகம் செய்வதற்கான குழாய் இணைப்புகளைக் கொண்ட - நகராட்சி வளாகத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் போதிய அளவுக்கு நீர் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டு, அதனால் அத்தொட்டி மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும் பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாகவே ஜலாலிய்யா தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படாமல் இருந்ததாகத் தெரிவித்தார்.
இதுநாள் வரை, 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நகராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து நெய்னார் தெரு உட்பட பல பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாகவும், இனி ஜலாலிய்யா நீர்த்தேக்கத் தொட்டியில் 1 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்றப்பட்டு நெய்னார் தெருவிலுள்ள சுமார் 300 குடிநீர் இணைப்புகளுக்கு அங்கிருந்து வினியோகிக்கப்படவுள்ளதாகவும், இதன் காரணமாக நகராட்சி குடிநீர் தொட்டியில் இனி 3 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே ஏற்றப்பட்டு, அங்கிருந்து நெய்னார் தெரு தவிர இதர பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜலாலிய்யா மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் புதிதாக வினியோகிக்கப்படுவதால், நெய்னார் தெருவிலுள்ள குடிநீர் இணைப்புகளுக்கு இனி அதிக அழுத்தத்துடன் சீராக குடிநீர் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் குடிநீர் ஏற்றுவது குறித்து கருத்து தெரிவித்த அவர், அத்தொட்டியில் குடிநீர் ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் உள்ள காரணத்தால் உடனடியாக குடிநீர் ஏற்ற இயலாத நிலை உள்ளதாகவும், விரைவில் இக்குறை சரிசெய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 17:43 / 09.01.2013] |