டிசம்பர் மாதம் 19ஆம் தேதியன்று நடைபெறவிருந்த காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் போதிய உறுப்பினர் வருகை (கோரம்) இல்லாத காரணத்தால், ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் 31.12.2012 திங்கட்கிழமை காலை 11.15 மணிக்கு - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், நகர்மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார், நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பின்வரும் கூட்டப் பொருட்கள் மற்றும் ஒரு மேசைப் பொருள் (table agenda) குறித்து விவாதிக்கப்பட்டது:-
விவாதிக்கப்பட்டவை:
இக்கோரிக்கை குறித்து நல்ல ஆலோசனைகளைத் தருமாறு, 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி மன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
நகரிலுள்ள அனுமதி பெற்ற கோழிக்கடைகள் அனைத்தையும் கணக்கிட்டு, அக்கடைகளுக்கு பிரத்தியேகமாக குப்பை வாளிகளை வழங்கி குப்பைகளை சேகரிக்கலாம் என நகர்மன்றத் தலைவர் கருத்து தெரிவித்தார்.
அவ்வாறு செய்தால், துப்புரவுப் பணியாளர்கள் குறைவாக இருப்பதாலும், கோழிக் கழிவுகளைப் பொருத்த வரை தினமும் எடுத்துச் செல்ல வேண்டிய நிலை இருப்பதாலும், வழமையான குப்பை சேகரிப்புப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், குப்பைகளைக் கொட்டுவதற்காக இடம் தருவதாக அறிவித்து, ஐக்கியப் பேரவை சார்பில் பெறப்பட்ட கடிதத்தை 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் கூட்டத்தில் வாசித்தார்.
04.01.2013 வெள்ளிக்கிழமையன்று புஷ் கார்ட் (தள்ளு வண்டி) பெறப்பட்டு விடும் எனவும், அதன் பின்னர் அவற்றின் மூலம் கடைகளின் குப்பைகளை சேகரிக்கலாம் என்றும் ஆணையர் கூறினார்.
நிறைவில், குப்பைகளை முறைப்படி சேகரித்து, அனுமதிக்கப்பட்ட இடங்களில் அவற்றைக் கொட்ட தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பாக, நகரில் நில வணிகம் செய்யும் ரியல் எஸ்டேட் அதிபர்களை ஒன்றுகூட்டி சிறப்புக் கூட்டம் நடத்தலாம் என 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி கூறினார்.
அவ்வணிகர்களிடம் ஒரு ஏக்கருக்கு 5 செண்ட் நிலம் நகராட்சிக்குக் கேட்கலாம் என 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு கூறினார்.
பின்னர், ரியல் எஸ்டேட் அதிபர்களை அழைத்துப் பேச தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து நவம்பர் 30 அன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர் லுக்மான் கூட்டப் பொருளில் கோரிக்கை வைத்திருக்க, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் மீண்டும் அதே பொருளைக் கொண்டுவந்துள்ளது ஏன் என 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கேட்டார்.
KEPA அமைப்பின் சார்பில் பெறப்பட்ட கோரிக்கைகளையும் உள்வாங்கியே தான் இக்கூட்டப் பொருளை முன்வைத்துள்ளதாக உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் அப்போது கூறினார்.
உறுப்பினர் ஏ.லுக்மானின் முந்தைய கூட்டப் பொருள் மீதான தீர்மானத்தின்படி, DCW ஆலையை நேரில் ஆய்வு செய்ய குழு அமைக்காதது குறித்து உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்த படி, DCW ஆலையின் இல்மனைட் ஆலையை மூடாததைக் கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றலாம் என நகர்மன்றத் தலைவர் கூறினார். கண்டன தீர்மானம் நிறைவேற்ற போதிய ஆதாரம் எதுவுமில்லாததாக பெரும்பாலான உறுப்பினர்கள் கூறினர்.
பின்னர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாதந்தோறும் தொழிற்சாலையை ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்படும் ஆய்வறிக்கையை நகர்மன்றத்திடமும் சமர்ப்பிக்குமாறு கேட்கலாம் என்றும், சிறப்புக் குழு மூலம் கழிவு நீரோடையை ஆய்வு செய்ய அரசிடம் கேட்கலாம் என்றும் நகர்மன்றத் தலைவர் கூறினார்.
DCW ஆலை நிர்வாகம் காயல்பட்டினம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ள கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தற்காலிக பணியாளர்களை 89 நாட்களுக்கு மட்டுமே பணி நீட்டிப்பு செய்யலாம் என்ற அரசு விதிப்படி பணி நீட்டிப்பு செய்யவும், தற்காலிக / நிரந்தர பணியாளர்களின் பணியில் திருப்தியில்லையெனில் அதுகுறித்து மன்றம் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
நகராட்சியில் பணிபுரியும் பலர் பணிக்கு வராமலே ஊதியம் பெற்றுக்கொண்டிருப்பதாகவும், அவர்களின் வருகைப் பதிவேட்டை சோதிப்பதற்காக பலமுறை தான் கேட்டும் ஆணையர் அதனைத் தருவதில்லை என்றும் தலைவர் தெரிவித்தார்.
ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டை எழுத்துப்பூர்வமாகவோ, தீர்மானமாகவோ தருமாறு ஆணையர் கேட்டார். ஊழியரோ, அலுவலரோ தப்பு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஆணையரின் கடமை என்றும், அதற்கென தனியாக தீர்மானம் எதுவும் இயற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
ராமசாமி என்ற நகராட்சிப் பணியாளர் கடந்த ஓராண்டு காலமாக பணிக்கே வராம் அரசு ஊதியதைப் பெற்றுக்கொண்டிப்பதாகவும் கூறிய 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வியெழுப்பினார்.
அவர் குறித்து எழுத்தில் குற்றச்சாட்டு அளிக்குமாறு ஆணையர் கேட்க, கண்ணுக்கு முன் தெரியும் தவறு மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆணையர் எழுத்தில் கடிதம் கேட்பது ஏன் என்று 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி கேட்டார்.
பின்னர், விரைவில் அவர் மீது நடவடிக்கை எடுத்து, தகவல் தருவதாக ஆணையர் கூறினார்.
நிறைவில், ஒப்பந்தப் பணியாளரோ அல்லது நிரந்தர பணியாளரோ, அவரது பணியில் திருப்தியில்லையென ஆதாரப்பூர்வமாக அறியப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.
வாகனத்தில் என்னென்ன பழுதுகள் பார்க்கப்பட்டுள்ளது என்பதற்கான விபரக்குறிப்புகள் அடங்கிய கட்டண ரசீதை உரிய அலுவலர்கள் தர வேண்டும் என நகர்மன்றத் தலைவர் கூறினார்.
செலவு விபரங்களை கூட்டப் பொருளுடன் இணைத்தே தருமாறு 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கூறினார்.
2012 அக்டோபர் மாதத்திற்கான செலவுக் கணக்கு மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், நவம்பர் 2011 முதல் செப்டம்பர் 2012 வரையிலான செலவுக் கணக்கு நகராட்சி நிர்வாகத்தால் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
இக்கோரிக்கை யார் மூலம் கூட்டப் பொருளில் இணைக்கப்பட்டது என்று கேள்வியெழுப்பப்பட்டு, சிறிது நேரம் அது குறித்து விவாதம் சென்றது.
நிறைவில், இதுகுறித்து மின்வாரியத்திடமிருந்தும் கடிதம் பெறப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் இப்பொருள் குறித்து விவாதித்து முடிவெடுக்கலாம் என்றும் நகர்மன்றத் தலைவர் கூறினார்.
கீழ லெட்சுமிபுரத்தில் பொது கழிப்பிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ள இடம் கோயிலுக்கு அருகில் வருவதால், மாற்றிடத்தை ஆய்வு செய்து அவ்விடத்தில் கழிப்பறை கட்டுமாறு 14ஆவது வார்டு உறுப்பினர் பாக்கியஷீலா கூறினார்.
பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை எப்போது இயக்கப்படும் என 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் கேள்வியெழுப்பினார். ஜனவரி 22, 23 தேதிகளில் அதற்கான டெண்டர் விடப்படவுள்ளதாக நகராட்சி திட்ட உதவி அலுவலர் செந்தில் குமார் கூறினார்.
அரசு அனுமதி பெற்ற பத்திரிக்கைகளைச் சேர்ந்தோர் நகர்மன்றத்திற்கு விண்ணப்பக் கடிதம் தந்தால், அதனை கூட்டத்தில் பரிசீலித்து முடிவெடுக்கலாம் என உறுப்பினர்கள் பலர் கூறினர்.
இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
மேசைப்பொருள்
நவம்பர் 09ஆம் தேதியன்று 68,000 ரூபாய் தொகைக்கு தெரு விளக்கு உதிரி பாகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அவை ஒன்றுமே இல்லை என்றும், அவை எங்கெங்கு மாட்டப்பட்டுள்ளது என்பதற்கான விபரத்தை தான் கேட்டும் இன்று வரை ஆணையர் தரவில்லை என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
கலந்துகொண்டோர்:
இக்கூட்டத்தில், நகர்மன்றத் துணைத்தலைவர் உட்பட 17 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், தாய்லாந்து காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், துபை ஹாஜி துணி உமர், ஹாங்காங் ஹாஜா அரபி உட்பட ஏராளமானோர் இக்கூட்டத்தின்போது பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
கூட்டத் துளிகள்...
நகர்மன்றத் தலைவர் வேண்டுகோள்:
கூட்டப் பொருள் வாசிக்கப்படுகையில், அந்தந்த உறுப்பினரின் பொருள் வாசிக்கப்படும்போது அது தொடர்பான உறுப்பினர் கருத்து தெரிவிக்கலாம் என்றும், ஓர் உறுப்பினர் பேசிக்கொண்டிருக்கும்போது மற்ற உறுப்பினர்கள் அதுகுறித்து கருத்து தெரிவிப்பதாயிருந்தால், கை உயர்த்தி தலைவரின் அனுமதி பெற்ற பிறகு பேசுமாறும், உறுப்பினர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளக் கூடாது என்றும், பார்வையாளர்கள் அனைவரும் அமைதி காக்குமாறும் தெரிவித்துவிட்டு, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
பழைய கூட்ட நடவடிக்கைகள்:
நடப்பு கூட்டப் பொருள் வாசிக்கப்பட்டபோது, முந்தைய கூட்டப் பொருட்களையும், அவை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் முதலில் வாசிக்குமாறு 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி ஆகியோர் உட்பட சில உறுப்பினர்கள் கோரினர்.
அதனடிப்படையில் பழைய கூட்டப் பொருட்கள் வாசிக்கப்பட்டது. 30.11.2012 அன்று நடைபெற்ற கூட்டத்தில் 110 பொருட்கள் இடம்பெற்றிருந்தமையால் அவற்றை முழுமையாக வாசிப்பதற்கே நீண்ட நேரமானது. பின்னர், 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கூட்டப்பொருட்கள் வாசிக்கப்படுவது நிறுத்தப்பட்டு, அவை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மட்டும் வாசிக்கப்பட்டது.
வீடியோ பதிவு குறித்த விவாதம்:
நகர்மன்றக் கூட்டத்தை வீடியோ எடுப்பது ரத்து செய்யப்பட்டு தீர்மானம் இயற்றப்பட்டிருக்க, சிறப்புக் கூட்டம் வீடியோ எடுக்கப்பட்டது எப்படி என்று 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு கேட்டார்.
நகராட்சி சார்பில் வீடியோ எடுப்பது குறித்த பொருள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஊடகத்தினரை அத்தீர்மானம் கட்டுப்படுத்தாது என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
“நகராட்சியே வீடியோ எடுக்க வேண்டாம் என்று தீர்மானித்திருக்கும்போது ஊடகத்தார் எடுக்க எப்படி அனுமதிக்கலாம்?” என உறுப்பினர் சுகு மீண்டும் கேட்டார்.
பணி மேற்பார்வையாளருக்கு கிடுக்கிப் பிடி!
இதுவரை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டங்களில் ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் அவை நடைமுறைப்படுத்தப்படாததற்கான காரணம் குறித்து கூட்டத்தில் வினவப்பட்டது. இதுகுறித்து பணி மேற்பார்வையாளர்தான் விளக்கமளிக்க வேண்டும் என ஆணையர் கூறினார். அதனைத் தொடர்ந்து பணி மேற்பார்வையாளர் செல்வமணி கூட்டரங்கிற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
விரைவில் பணிகள் நிறைவேற்றப்படும் என அவர் அப்போது கூறினார். “இப்படியே ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்... ஊடகங்களும் விலாவாரியாக செய்திகளை உலகுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றனர்... இதனால் மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நாங்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டிருக்கிறோம்...
இனியும் தாமதிக்காமல், இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் பணி மேற்பார்வையாளரிடம் கூறினார்.
பார்வையாளர் பகுதியில் சலசலப்பு:
கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, பார்வையாளர் பகுதியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், கூட்டரங்கிற்கு வந்த காவல்துறையினர் பார்வையாளர்களை அமைதிப்படுத்தி அமரச் செய்தனர். |