காயல்பட்டினத்தில் 29.12.2012 நடைபெற்ற விழாவில் 144 ஏழை முஸ்லிம் மகளிருக்கு ரூ. 7 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல்படுத்தி வருவதாகவும்,. அந்த வகையில் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் நடத்தப்படும் இந்த விழாவில் 144 ஏழை முஸ்லிம் மகளிருக்கு பல்வேறு வகையான தொழில்கள் செய்யவும், குழந்தைகளின் கல்வி செலவுகளுக்காகவும் இவ்விழாவில் ரூ.7 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கூறினார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருவதாகக் கூறிய அவர், பள்ளி - கல்லூரிகளில் பயிலும் மாணவ - மாணவியருக்கு விடுதி கட்டணம், கல்வி உதவித்தொகை, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் 1000 இடங்களைப் பெறும் - பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு பட்டப்படிப்பு முடிக்கும் வரை மாதம் ரூ.3000 வழங்கப்படுவதாகவும், மாணவர்கள் விடுதியில் தங்கி பயிலும்போது அவர்களது ஆங்கிலப் புலமையை மேம்படுத்த ரூ.1.83 கோடி செலவில் சிறப்புப் பயிற்சி போன்ற ஏராளமான திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளதாகவும் பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் ப.கொங்கன் தலைமை தாங்கினார். முன்னதாக தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்க செயலாளர் அ.வஹீதா அனைவரையும் வரவேற்றார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கரபாண்டியன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தலைவர் விஜயகுமார், திருச்செந்தூர் வட்டாட்சியர் சங்கரபாண்டியன், மக்கள் தொடர்பு உதவி அலுவலர் சி.குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ், ஹாஜி எஸ்.அக்பர்ஷா, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.லுக்மான், எம்.ஜஹாங்கீர், எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கியஷீலா, இ.எம்.சாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
படங்களில் உதவி:
A.K.முஹம்மத் இம்ரான் |