காயல்பட்டினம் வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் லீக் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
காயல்பட்டினத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துர்ரஹ்மான் ஆகியோர் 25.12.2012 செவ்வாய்க்கிழமை காலை 07.30 மணிக்கு, செந்தூர் விரைவுத் தொடர்வண்டியில் காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையம் வந்திறங்கினர். தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் லீக் சார்பில் அவர்களுக்கு தொடர்வண்டி நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஹாஜி பி.மீராசா மரைக்காயர், மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் ஆகியோர், தலைவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகளும், காயல்பட்டினம் நகர முஸ்லிம் லீக் நிர்வாகிகளும் திரளாகக் கலந்துகொண்டனர்.
பின்னர், நகர முஸ்லிம் லீக் மாணவரணியினரால் அவர்கள் பிறைக்கொடி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
காலை 10.30 மணியளவில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் இல்லத்தில், அவரை தலைவர்கள் மரியாதை நோக்குடன் சந்தித்துப் பேசினர்.
அப்போது, சென்னையில் விரைவில் விரிவாகக் கட்ட திட்டமிடப்பட்டுள்ள - கட்சியின் தலைமை அலுவலக கட்டிடப் பணிக்காக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனிடம் ஹாஜி எம்.எம்.உவைஸ் நன்கொடை வழங்கினார்.
|