மருத்துவத் துறையில் உலக காயல் நல மன்றங்களை ஒருங்கிணைப்பதற்காக விவாதிக்கப்பட்டு வரும் ‘ஷிஃபா’ செயல்திட்டத்தில் இணைய ஒப்புதல் அளித்தும், பள்ளிக் கல்வியுடன் மத்ரஸா கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கும் வரும் கல்வியாண்டு முதல் இலவச சீருடை வழங்குவதென்றும் கத்தர் காயல் நல மன்ற செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் செய்தி தொடர்பாளர் கவிமகன் காதர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
நிறைவான அருளன்பின் இறை ஏகன் திருப் பெயரால்!
எமது கத்தர் காயல்நல மன்றத்தின் 56வது செயற்குழுக் கூட்டம், மன்சூரா காயல் நண்பர்கள் இல்லத்தில், 08-03-13 வெள்ளிக்கிழமை, ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. .அல்ஹம்துலில்லாஹ்.
மொஹ்தூம் மீரான் இறைமறை வசனங்களை இனிதே ஓதித் துவக்கி வைத்த இந்தக் கூட்டத்திற்கு கவிமகன் காதர் தலைமையேற்றார்.
தலைவர் உரை:
மன்றத் தலைவர் ஃபஜுல் கரீம் துவக்கமாக உரையாற்றியபோது, நகர்நலனை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட இந்த மன்றம், எவ்வித பாகுபாடுமின்றி கடந்த நான்காண்டு காலம் நேர்மையுடனும், இதய சுத்தியுடனும் பாடுபட்டு வந்திருப்பதாகவும், இனியும் இறையருளால் இந்தப் பணி தொடரும் என்றும், இதற்காக உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த பொதுக்குழுவில் தான் விடுத்த வேண்டுகோளை ஏற்று புதுமுகங்கள் தானாக முன்வந்து பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
இலவச சீருடை, புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம்:
இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை வழங்கும் திட்டத்தில் பள்ளிக் கல்வியுடன் மத்ரஸா கல்வியையும் ஒரே நேரத்தில் பயிலும் ஏழை மாணவர்களுக்கும் இலவச சீருடை வழங்குவது என்றும், இந்தத் திட்டத்தை ஒருங்கிணைப்பதற்கு மொஹ்தூம் மீரான், ஃபைசல் ஆகியோரும், கேன்சர் விழிப்புணர்வு மற்றும் கண்டறியும் பரிசோதனை முகாமை அப்துல்லாஹ், மொஹ்தூம் மீரான் ஆகியோரும் ஒருங்கிணைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
நகரளவிலான வினாடி-வினா போட்டி:
மேலும், இக்ராஃ மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்டுடன் இணைந்து வழமை போல மன்றம் நடத்தவிருக்கும் பள்ளி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டிக்கான ஆயத்தங்களை கவிமகன் காதர் மற்றும் டொஷிபா முஹைதீன் தம்பி ஆகியோர் செய்வதற்குப் பணிக்கப்பட்டனர்.
மருத்துவத்துறை ஒருங்கிணைப்புத் திட்டம் ‘ஷிஃபா’வில் இணைவு:
அகில உலக மன்றங்கள் இணைந்து செயல்படுத்தவிருக்கும் ‘ஷிஃபா’ மருத்துவ உதவி மையத்துடன் இணைந்து செயல்படுவதென மன்றம் அதிகாரபூர்வமாக முடிவு செய்தது. இதன் அனைத்து ஒருங்கிணைப்புப் பணிகளையும் முஹம்மது யூனுஸுடன் இணைந்து சாகுல் ஹமீத், கவிமகன் காதர் ஆகியோரும் மேற்கொள்வார்கள் என முடிவு செய்யப்பட்டது.
நிறைவாக ஹாஃபிழ் நஸ்ருதீன் அவர்களது துஆ பிரார்த்தனையுடன் செயற்குழுக் கூட்டம் இனிதே நடந்து முடிந்தது.
இவ்வாறு, கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் கவிமகன் காதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.K.ஸாலிஹ்
உள்ளூர் பிரதிநிதி
கத்தர் காயல் நல மன்றம்
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது @ 08:32 / 11.03.2013] |