மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் காயல்பட்டினம் ஸ்காட் தொண்டு நிறுவனம், சுலைமானியா ரியல்ஸ் ஆகியவற்றின் இணைந்தேற்பாட்டில், 13.03.2012 செவ்வாய்க்கிழமையன்று (நேற்று) காலை 10.00 மணி முதல் ம08.03.2013 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை, இளைஞர் ஐக்கிய முன்னணியின் புகாரீ நினைவு நூலக அரங்கிலும், சதுக்கையிலும் நடைபெற்றது.
திருநெல்வேலி SCAD தொண்டு நிறுவனம் நடத்திய இம்முகாமில், உடல் ஊனமுற்ற - மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, SCAD தொண்டு நிறுவனத்தின் சேவைப்பணிகளில் இணைந்து செயல்படுவதற்காக, பெல்ஜியம் நாட்டிலிருந்து தன்னார்வத்துடன் கலந்துகொண்ட கரோலின், லீஸெ, க்ரீத் ஆகிய பயிற்சியாளர்களுடன், ஸ்டாலின், மல்லிகா ராஜ், சோஃபியா, ப்ரிசில்லா, அருணா, லதா ஆகிய ஸ்காட் நிறுவன பயிற்சியாளர்களும் இணைந்து பரிசோதனை செய்து, உடல் மற்றும் மன நல ஆலோசனைகளை வழங்கினர்.
மன வளர்ச்சி குன்றியோருக்கு - மூளைக்கு தூண்டுதலளிக்கும் வகையிலான - கலைந்த உருவங்களை சேர்த்தல், வடிவங்களை அதற்கான துளைகளில் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பொருட்களை அளித்து சோதனை செய்தனர். அப்பொருட்களை அவர்கள் பயன்படுத்தும் விதத்தைக் கூர்ந்து கவனித்து, அவர்களிடமுள்ள பலம் - பலவீனங்களை பெற்றோருக்குத் தெரிவித்த தன்னார்வ சேவையாளர்கள், மன வளர்ச்சி குன்றிய அவர்களை வீட்டில் நடத்த வேண்டிய விதம் குறித்து தீர்க்கமான ஆலோசனைகளை வழங்கினர்.
பெல்ஜியத்தைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் ஆங்கிலத்தில் அளித்த ஆலோசனைகளை பெற்றோருக்கு தமிழிலும், தமிழில் பெற்றோர் தெரிவித்த கருத்துக்களை பயிற்சியாளர்களுக்கு ஆங்கிலத்திலும், SCAD தொண்டு நிறுவனத்தின் மூத்த ஒருங்கிணைப்பாளர்கள் மொழியாக்கம் செய்து விளக்கினர்.
முகாம் நடவடிக்கைகளை, சுலைமானியா ரியல்ஸ் நிறுவனத்தின் அதிபர் எஸ்.ஏ.ஷெய்கு சுலைமான், சமூக ஆர்வலர் எம்.புகாரீ ஆகியோரின் ஒருங்கிணைப்பில், இளைஞர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஹாஃபிழ் இஸ்ஸத் மக்கீ, ஹாஜி கே.எஸ்.முஹம்மத் நூஹ், எஸ்.டி.முஹம்மத் அலீ ஸாஹிப் (டி.எம்.), ஸிராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இம்முகாமில், 15 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மன வளர்ச்சி குன்றியவர்கள் வளர வளர, அவர்களின் ஊனம் குறைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இதுபோன்ற பயிற்சி மற்றும் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில், வாரந்தோறும் குறைந்தது இரண்டு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இயன்றளவுக்கு அறுவை சிகிச்சைகளைத் தவிர்த்திடும் வகையில் பயிற்சிகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருவதாகவும், அறுவை சிகிச்சை அவசியப்படுவோருக்கு சலுகை கட்டணத்தில் அறுவை சிகிச்சையைப் பெற்றிட வழிவகை செய்யப்பட்டு வருவதாகவும், SCAD தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். |