காயல்பட்டினம் நகராட்சியின் இரண்டாவது குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று (10.03.2013) காலை 10.00 மணியளவில் காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளை, தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை உதவி அலுவலர் சி.குமார் நெறிப்படுத்தினார்.
தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வரவேற்புரையாற்றினார்.
காயல்பட்டினத்தில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள குடிநீர் திட்டங்களுக்கு பொருளுதவி புரிந்த முன்னோர்களை பட்டியலிட்டுப் பேசிய அவர், நடப்பு இரண்டாவது குடிநீர் திட்டத்திற்காக தொடர் முயற்சி செய்த காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் கே.எம்.இ.நாச்சி தம்பி மற்றும் உறுப்பினர்கள், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஏ.வஹீதா மற்றும் உறுப்பினர்கள், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் மற்றும் உறுப்பினர்களுக்கும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை உள்ளிட்ட, இதற்காக உழைத்த நகரின் அனைத்து பொதுநல அமைப்புகளுக்கும் தனதுரையில் நன்றி தெரிவித்தார்.
பின்னர், மேடையில் வீற்றிருந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, காயல்பட்டினத்திற்கான இரண்டாவது குடிநீர் திட்டத்திற்கான பணிகளைத் துவக்கி வைக்குமுகமாக, தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் அடிக்கல்லை திறந்து வைத்தார்.
பின்னர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் த.மோகன் வாழ்த்துரை வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து, இவ்விழாவிற்குத் தலைமை தாங்கிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தலைமையுரையாற்றினார்.
நகரில் பல நல்ல பணிகள் தொடர்ந்து நடைபெற, நகர்மன்றத் தலைவர் உறுப்பினர்கள் இணைந்து செயல்பட வேண்டுமென அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
பின்னர், அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் விழா பேருரையாற்றினார்.
காயல்பட்டினம் மக்கள் என்றுமே அர்ப்பணிப்பு மிக்கவர்கள் என்று புகழ்ந்துரைத்த அவர், இந்த ஊர் நலத்திட்டங்களுக்காக அவர்கள் நிலங்களை அன்பளிப்பு செய்தல் உட்பட பல உதவிகளை நிறைவாகச் செய்துள்ளதாகக் கூறினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில்தான் இந்த மாவட்டத்தில் புதுப்புது திட்டங்கள் செயல்வடிவம் பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
பின்னர், தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை பிரச்சினை குறித்து விளக்கிப் பேசிய அவர், இன்னும சில மாதங்களில் இப்பிரச்சினை முடிவுக்கு வரும் என்றார்.
நிறைவாக, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் என்.சின்னத்துரை, ஆழ்வார்திருநகரி ஒன்றியக் குழு தலைவர் விஜயகுமார், தூத்துக்குடி ஒன்றியக் குழு தலைவர் சண்முகவேல், சாத்தானகுளம் ஒன்றியக் குழுத் தலைவர் சுரேஷ்குமார், திருச்செந்தூர் கோட்டாட்சியர் கொங்கன், காயல்பட்டினம் நகராட்சி பொறியாளர் முத்து, பணி மேற்பார்வையாளர் செல்வமணி,
காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், நகர்மன்ற உறுப்பினர்களான வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, பி.எம்.எஸ்.சாரா உம்மாள், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஏ.கே.முஹம்மத் முகைதீன், ஜெ.அந்தோணி, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், ஏ.ஹைரிய்யா, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ஆர்.ரெங்கநாதன் என்ற சுகு, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கியஷீலா, கே.ஜமால், எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி,
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், அதன் அங்கத்தினரான ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, ஹாஜி எஸ்.எம்.உஸைர், ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத்,
காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர்களான கே.எம்.இ.நாச்சி தம்பி, ஏ.வஹீதா உட்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் (காயல்பட்டணம்.காம்)
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 23:38 / 10.03.2013] |