மருத்துவத் துறையில் உலக காயல் நல மன்றங்களை ஒருங்கிணைப்பதற்காக விவாதிக்கப்பட்டு வரும் ‘ஷிஃபா’ செயல்திட்டத்தில் இணைய ஒப்புதல் அளித்தும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த - பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளுக்காக ரூபாய் 1,15,000 நிதியொதுக்கியும் சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு தீர்மானித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 08.03.2013 வெள்ளிக்கிழமையன்று 20.00 மணிக்கு மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. உறுப்பினர் எம்.ஜெ.செய்யித் அப்துர்ரஹ்மான் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
தலைமையுரை:
மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். மன்றக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்து மன்றத்தால் அனுப்பப்படும் கைபேசி குறுஞ்செய்திகளுக்கு மன்ற உறுப்பினர்கள் உடனுக்குடன் பதிலளித்து ஒத்துழைக்குமாறு ஏற்கனவே விடுக்கப்பட்ட வேண்டுகோளை மீண்டும் அவர் வலியுறுத்தினார்.
‘ஷிஃபா” தொடர்பான தகவல்கள்...
ஒருங்கிணைந்த மருத்துவ உதவித் திட்டமான ‘ஷிஃபா’ உட்பட, Conference Call முறையில் மன்றத்தின் நிர்வாகக் குழு இதுநாள் வரை விவாதித்துள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
கூட்ட ஒருங்கிணைப்பாளருக்கு பாராட்டு:
நடப்பு கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல், தனது பணியை சிறப்புற செய்து, கூட்டத்தை நல்ல முறையில் ஒருங்கிணைக்கும் நோக்குடன், மன்றத்தின் வரலாறு, கூட்டத்தை ஒருங்கிணைப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவற்றையெல்லாம் முறைப்படி கேட்டறிந்துகொண்டு செயல்பட்டது தன்னை பெரிதும் மகிழச் செய்ததாகக் கூறி, அவரைப் பாராட்டினார்.
புதிய செயற்குழுவில் போட்டியிட அழைப்பு:
வரும் 2013 - 2015 பருவத்திற்கான புதிய நிர்வாகக் குழுவில், இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க ஆயத்தமாகுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ஒருங்கிணைப்பாளர் உரை:
பின்னர், நடப்பு கூட்ட ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் உரையாற்றினார். மன்றத்தில் புதிதாக உறுப்பினரானோரையும் அறியச் செய்திடும் நோக்குடன், மன்றத்தின் வரலாற்றை விளக்கிப் பேசினார்.
ஒற்றுமையே காரணம்...
மன்றத்தின் செயல்பாடுகள் இறையருளால் முழு வெற்றி பெற்று வருவதற்கு, அனைத்து உறுப்பினர்களின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பே காரணம் என அவர் கூறினார்.
நடப்பு கூட்டத்தை ஒருங்கிணைப்பதில் தனக்குக் கிடைத்த அனுபவங்களை கூட்டத்தில் பகிர்ந்துகொண்ட அவர், இந்த வாய்ப்பை வழங்கியமைக்காக மன்ற செயற்குழுவுக்கு நன்றி கூறினார்.
கேள்வி நேரம்...
மன்ற உறுப்பினர்களுக்கு எழும் பொதுவான சந்தேகங்கள் குறித்து விளக்கம் பெறச் செய்திடும் பொருட்டு, கூட்டம் நிறைவடையுமுன் கேள்வி நேரம் என நிரலை ஏற்படுத்தலாம் என்று அவர் ஆலோசனை வழங்கினார்.
செயலர் உரை:
பின்னர், கடந்த கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் அது செயல்படுத்தப்பட்டுள்ள விபரங்கள் குறித்து மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் கூட்டத்தில் விளக்கிப் பேசினார்.
மன்ற இலச்சினை வெளியீடு:
மன்றத்திற்காக இறுதி செய்யப்பட்ட இலச்சினை, சிங்கப்பூர் நாட்டின் பதிவுத்துறைக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், துறை ஒப்புதல் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறிய அவர், வரும் பொதுக்குழுவில் மன்ற இலச்சினை முறைப்படி வெளியிடப்படும் என்று கூறினார்.
விண்ணப்பங்களைப் பரிசீலிக்க நிலையான செயல்முறை:
உதவிகள் கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் குறித்த - இறுதி செய்யப்பட்ட நிலையான செயல்முறை (Standard Operating Procedure) கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அவர், இனி, இந்த நிலையான செயல்முறைப் படியே விண்ணப்பங்கள் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஆயத்த நிலையில் ஆண்டறிக்கை:
2012ஆம் ஆண்டிற்கான மன்றத்தின் ஆண்டறிக்கை இறுதி செய்யப்பட்டு, சமர்ப்பிக்க ஆயத்த நிலையிலிருப்பதாகக் கூறிய அவர், 2013 - 2015 புதிய பருவத்திற்கான செயற்குழு பொறுப்புகளுக்கு போட்டியிடுவதற்காக, 31 மார்ச் 2013 தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய முன்வருமாறு அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார்.
பொதுக்குழு குறித்த தகவல்கள்...
மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் (AGM) குறித்த அறிவிப்புகள் அனைத்துறுப்பினர்களுக்கும் முறைப்படி மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
முதியோர் சமூக நலத்திட்டம்:
மன்றத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட “முதியோர் சமூக நலத்திட்ட”த்திற்கான நடைமுறை சாத்தியக்கூறுகள் குறித்து இறுதி செய்யப்பட்ட அறிக்கையை, அதற்கென நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரும், மன்றத்தின் மூத்த உறுப்பினருமான அஹ்மத் ஃபுஆத் மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமானிடம் வழங்கினார்.
பின்னர், குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களான சோனா அபூபக்கர் ஸித்தீக், ஹாஃபிழ் அஹ்மத் முஹ்யித்தீன், காதிர் ஸாஹிப் அஸ்ஹர், மொகுதூம் முஹம்மத் ஆகியோர், சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து கூட்டத்தில் விளக்கினர்.
சமர்ப்பிக்கப்பட்ட இவ்வறிக்கை குறித்து இறுதி செய்வதற்காக மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் முறைப்படி அனுப்பி வைக்கப்படும் என்றும், வரும் பொதுக்குழுவில் இத்திட்டம் முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என்றும் அறிவித்த மன்றத் தலைவர் ரஷீத் ஜமான், இந்த அறிக்கையை ஆயத்தம் செய்து, குறித்த காலக்கெடுவுக்குள் சமர்ப்பித்த குழுவினருக்கு மனமார நன்றி தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த மருத்துவ உதவித் திட்டமான ‘ஷிஃபா’ குறித்து, அதன் தற்காலிக குழு 01.03.2013 அன்று நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து கூட்டத்தில் விளக்கிப் பேசிய மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத், 29.03.2013 அன்று நடைபெறவுள்ள - தற்காலிக குழுவின் அடுத்த கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு முன், இதுகுறித்த மன்றத்தின் முடிவுகளை அறிவிக்க வேண்டிய நிலையிலுள்ளதாகக் கூறினார்.
‘ஷிஃபா’ தற்காலிக குழு ஒருங்கிணைப்பாளர் பங்கேற்பு:
பின்னர், ‘ஷிஃபா’ குறித்து விவாதித்து வரும் தற்காலிக குழுவின் ஒருங்கிணைப்பாளர் சாளை முஹம்மத் முஹ்யித்தீன் - தொலைதொடர்பு முறையில் கூட்டத்தில் கலந்துகொண்டு, அது தொடர்பான - உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்துப் பேசினார்.
‘ஷிஃபா’வில் இணைவு:
நிறைவில், நோய்நொடிகளிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கும் நோக்குடனான - ஒருங்கிணைந்த மருத்துவ உதவித் திட்டம் ‘ஷிஃபா’வில் இணைவதாக கூட்டத்தில் முறைப்படி அறிவிக்கப்பட்டது. இச்செயல்திட்டம் குறித்து தற்காலிக குழு தொடர்ந்து விவாதிக்கவுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வரவு - செலவு கணக்கறிக்கை:
பின்னர், இதுநாள் வரையிலான மன்றத்தின் வரவு - செலவு கணக்கறிக்கையை, மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை கூட்டத்தில் சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
நடப்பாண்டின் முதல் காலாண்டிற்கான மன்ற உறுப்பினர் சந்தா தொகையை நிலுவையின்றி குறித்த காலத்தில் செலுத்திய அனைத்துறுப்பினர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். வரும் வருடாந்திர பொதுக்குழுவின்போது, “ஒருநாள் ஊதிய நன்கொடை திட்ட”த்தின் கீழ் மன்றத்தால் பெறப்படவுள்ள நிதி மூலம் மன்றத்தின் நிதிநிலை கனிசமான அளவில் அமையும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், ஏழைகள் நல உதவிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதித் தொகை விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இக்ராஃ வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்கு நிதியொதுக்கீடு:
அடுத்து, இக்ராஃவின் வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்காக மன்றத்தின் பங்குத்தொகையாக ரூபாய் 25,000 கூட்டத்தில் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
நலத்திட்ட உதவிகளுக்கு நிதியொதுக்கீடு:
மருத்துவம், கல்வி, மனிதாபிமான தேவைகளுக்காக, 1,15,000 ரூபாய் தொகையளவில் பயனாளிகளுக்கு மன்றத்தால் உதவிகள் வழங்கப்பட்டுள்ள விபரத்தை செயலாளர் மொகுதூம் முஹம்மத் கூட்டத்தில் விவரித்தார்.
விசாரணைக் குழுவுக்கு நன்றி:
மன்ற துணைத்தலைவர் அபூ முஹம்மத் உதுமான் தலைமையில், ஏ.எச்.காதிர் ஸாஹிப் அஸ்ஹர், எம்.எச்.முஹம்மத் உமர் ரப்பானீ, எம்.எல்.எஸ்.மொகுதூம் அப்துல் காதிர் ஆகியோரை உள்ளடக்கி நியமிக்கப்பட்ட விண்ணப்பங்கள் விசாரணைக் குழு, உரிய காலத்தில் தனது விசாரணையை நடத்தி, அறிக்கை சமர்ப்பித்தமைக்காக கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. பின்னர், இவ்விசாரணையின்போது தாம் பெற்ற அனுபவங்களை குழுவினர் கூட்டத்தில் விளக்கினர்.
அத்தியாவசிய சமையல் பொருளுதவி:
மன்றத்தின் செயல்திட்டங்களுள் ஒன்றான “அத்தியாவசிய சமையல் பொருளுதவி திட்ட”த்தின் கீழ், 51 பயனாளிகளுக்கு, வரும் ஏப்ரல் மாதம் 01ஆம் தேதியன்று பொருட்கள் வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
வருடாந்திர பொதுக்குழுவிற்கு சிறப்பு விருந்தினர்கள் வருகை:
வரும் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில், அந்நேரத்தில் சிங்கப்பூர் வருகை தரும் பொது சேவையாளர்களான ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் (இலங்கை காயல் நல மன்ற தலைவர்) ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து கண்ணியப்படுத்துவதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
உறுப்பினர் எம்.என்.ஜவஹர் இஸ்மாஈல் தலைமையில் - இக்கூட்டத்திற்கான ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது. கூட்ட ஏற்பாடுகள் தொடர்பான அனைத்து முன்னேற்பாடுகளையும் இக்குழு பொறுப்பேற்று செய்யுமெனவும், இக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் பொருட்டு - அவர்களது செயல்பாடுகளில் அனைத்து உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பளிக்குமாறும் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
பொதுக்குழுவை முன்னிட்டு போட்டிகள்:
வருடாந்திர பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகளின் ஓரம்சமாக, கூட்டத்திற்கு முன் - திருமறை குர்ஆன் மனனப் போட்டி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளையும், கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட சில விளையாட்டுப் போட்டிகளையும் நடத்திட தீர்மானிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக, மன்ற உறுப்பினர்களான எம்.ஜெ.செய்யித் அப்துர்ரஹ்மான், ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் ஆகியோர் குழுவினராக நியமிக்கப்பட்டனர். இந்நிகழ்வுகளனைத்தையும், கூட்டத்திற்கு முந்தைய நாளான 31.03.2013 தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
KWAS Mini Marathon:
மன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக - வரும் 24.03.2013 அன்று, KWAS Mini Marathon என்ற பெயரில் குறுநீள் ஓட்டப்போட்டியை நடத்திட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இப்போட்டியில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு பங்கேற்பாளருக்காகவும் அனுசரணையாளர் ஒருவர் 10 சிங்கப்பூர் டாலர் செலுத்தவுள்ளார். அதிகளவில் உறுப்பினர்கள் போட்டியில் கலந்துகொண்டால், இதன்மூலம் அதிக தொகை மன்றத்திற்கு வருவாயாகக் கிடைக்கும்.
இதன்மூலம் பெறப்படும் நிதித்தொகை, தாயகத்திலிருந்து - சிறப்புத் தேவைகளுக்காக உதவி கோரும் பயனாளிகளுக்கு அளிக்கப்படும். இப்போட்டியில் அனைத்து உறுப்பினர்களும் ஆர்வத்துடன் பங்கேற்க வருமாறு கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது.
நிகழ்விடம் மற்றும் நேரம் குறித்து, இன்னும் ஒரு சில நாட்களில் அனைத்துறுப்பினர்களுக்கும் கைபேசி குறுஞ்செய்தி அனுப்பப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த கூட்ட ஒருங்கிணைப்பாளர்:
வரும் ஏப்ரல் மாத செயற்குழுக் கூட்ட ஒருங்கிணைப்பாளராக உறுப்பினர் செய்யித் லெப்பை நியமிக்கப்பட்டார்.
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.ஆர்.ஏ.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
பின்னர், அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |