காயல்பட்டினம் நகராட்சியின் இரண்டாவது குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று (10.03.2013) காலை 10.00 மணியளவில் காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் நடைபெற்றது.
இவ்விழாவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வரவேற்புரையாற்றினார். அவரது உரையின் தொகுப்பு வருமாறு:-
எல்லாப்புகழும் இறைவனுக்கே! வல்லோன் அவனே துணை நமக்கே!!
காயல்பட்டினம் நகராட்சி வரலாற்றிலும், காயல் மாநகர் மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் பொன்னெழுத்துகளால் பொறித்து, நினைத்து நினைத்து பூரிப்படையக் கூடிய வகையிலே நமதூரின் - நமதூர் மக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டமான இரண்டாவது குடிநீர் திட்டம் எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நமது மரியாதைக்கும், பாசத்திற்கும் உரிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் இதோ இன்று நனவாகி நடைபெற்றுக் கொண்டிருகின்றது.
இந்த இரண்டாம் குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டுவிழா நிகழ்ச்சிக்கு தலைமையேற்று சிறப்பித்து தர வருகைதந்துள்ள - இத்திட்டத்திற்குத் தேவையான 56 சென்ட் நிலத்தை அரசின் சார்பில் வழங்கியிருக்கிற மாவட்ட ஆட்சி தலைவர் திரு.ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு இந்நேரத்தில் நம் நகர மக்கள் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்...
காயல்பட்டினம் நகராட்சி இரண்டாம் குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, விழா பேருரையாற்ற வருகை தந்துள்ள - இந்நகரின் சிறப்பான இத்திட்டமானது காலதாமதமின்றி துவங்கி, சீராக நடைபெற உதவிகள் செய்த - செய்துகொண்டிருக்கின்ற மாண்புமிகு தொழிலாலர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் அவர்களே!
வாழ்த்துரை வழங்க வருகை தந்துள்ள அரசு அதிகாரிகளே! உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே! அரசு அலுவலர்களே! நகர்மன்ற உறுப்பினர்களே! உங்கள் அனைவரையும் காயல்பட்டினம் மக்களின் பிரதிநிதியாக - நகரமன்றத் தலைவராக வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
நமதூரின் சரித்திரப் புகழ்மிக்க இந்த இரண்டாம் குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியை, மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும், வாய் நிறைய வாழ்த்துகளோடும், உள்ளார்ந்த பிரார்த்தனையோடும் காண்பதற்கு வருகை தந்துள்ள எனது அன்பிற்குரிய காயல் மாநகரின் அனைத்து சமுதாய மக்களே! ஆன்றோகளே! சான்றோர்களே! பெரியோர்களே! பெண்களே! உங்கள் அனைவரையும் காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சார்பாக வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மன் லம் யஷ்குரின் நாஸ லம் யஷ்குரில்லாஹ் - அதாவது மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவன், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவனாக மாட்டான் என்பது நபிமொழி. அந்த அடிப்படையில், இந்த மக்களுக்காவே வாழ்ந்து கொண்டிருக்கின்ற, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தமிழக அரசின் திட்டங்களைத் தீட்டி, அவற்றை செயல்படுத்தி, வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிற - இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தலைசிறந்து விளங்க வேண்டுமென்பதற்காக அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற நமது தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு காயல்பட்டினம் மக்களின் சார்பாகவும், எமது காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்.
அம்மா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட IUDM திட்டத்தின் மூலம் நிதியுதவி கிடைக்கப் பெற்றதை பெருமையோடு இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மத்திய அரசின் நிதியை பெற்றுத் தருவதற்காகவும் அவர்கள் பல வகைகளில் முயற்சிகள் செய்வதற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
காயல் மாநகரின் வரலாற்றிலே இடம்பெற்றுள்ள இரண்டாம் குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற முதலாவது கூட்டுக் குடிநீர் திட்டம் பற்றி இங்கு உங்களோடு ஒருசில வார்த்தைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். முதலாவது கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக தாராளமாக இடமும், பணமும் தந்துதவிய சென்ற தலைமுறை பெரியோர்கள் பற்றி இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது எனது கடமை என்ற அடிப்படையில், இந்த நல்ல தருணத்தில் அவர்களை நன்றியோடு நினைவுகூர விரும்புகிறேன்.
நம் கண் முன்னே காட்சியளித்துக் கொண்டிருக்கின்ற இந்த காயல்பட்டினத்தின் முதல் குடிநீர் தொட்டியானது (பேருந்து நிலைய வளாகத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுட்டிக்காண்பிக்கிறார்...) முதலாவது கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக உருவாக்கப்பட்டது. இதன் அடிக்கல்லானது அப்போதைய முதல் மந்திரி பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் நாட்டப்பட்டு, 1955ஆம் ஆண்டில் அவர்களாலேயே திறந்தும் வைக்கப்பட்டது.
நமதூர் பெரியோர்களின் பெருந்தன்மையையும், வாரி வழங்கும் வள்ளல் தன்மையையும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்ற இந்த நீர்த்தேக் தொட்டி அமைந்துள்ள இடத்திற்கு ஆப்தீன் ஹாஜி அவர்களின் தாயார் ஹாஜ்ஜா அஹ்மது மீரா நாச்சி என்ற பொம்பளை பிள்ளை ஹாஜி அவர்களும், புளியங்கொட்டை பு.க.செய்யிது முஹம்மது அவர்களும் ஆளுக்கு தலா ஒன்றரை ஏக்கர் நிலம் வழங்கியுள்ளனர்.
முதலாவது குடிநீர் திட்டத்திற்கு இப்போதைய 5 கோடி ரூபாய் மதிப்பிற்குச் சமமாக அன்றே 50 ஆயிரம் ரூபாயை தனி நபராக அ.க.அப்துல் காதர் அவர்கள் வழங்கி பெருமை சேர்த்தார்கள்.
இது தவிர அனைத்து சமுதாயத்தைச் சார்ந்த பெரியோர்களாம் - ஊரின் நன்மை ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, வாரி வழங்கியிருக்கின்ற வள்ளல்களின் பெயர்களை இங்கே - இந்த இடத்திலே நன்றியோடு நான் நினைவுகூர விரும்புகின்றேன்...
01. புளியங்கொட்டை செய்து முஹம்மது அவர்கள்
02. ஐ.எல்.எஸ். ஆப்தீன் ஹாஜி அவர்கள்
03. என்.கே.அமீர் சுல்தான் அவர்கள்
04. எல்.கே.லெப்பை தம்பி அவர்கள்
05. அ.க.அப்துல் காதர் அவர்கள்
06. எம்.டி.எஸ்.முஹம்மது தம்பி அவர்கள்
07. பி.எஸ்.அப்துல் காதர் அவர்கள்
08. எஸ்.ஓ.ஹபீப் ஹாஜி அவர்கள்
09. எம்.கே.டி.முஹம்மது அபூபக்கர் அவர்கள்
10. எஸ்.கே.முஹம்மது லெப்பை அவர்கள்
11. ம.கு.சம்சுதீன் அவர்கள்
12. வி.எம்.எஸ். லெப்பை அவர்கள்
13. கே.டி.கோசல்ராம் அவர்கள்
14. ஒத்த முத்து ஹாஜி அவர்கள்
15. பொன்னையா நாடார் அவர்கள்
16. பொன்னுசாமி நாடார் அவர்கள்
17. தங்க ராஜ் நாடார் அவர்கள்
18. ராஜபாண்டி நாடார் அவர்கள்
19. துரை ராஜ் நாடார் அவர்கள்
20. அருணாசல நாடார் அவர்கள்
21. பாளையம் செய்யது முஹம்மது லெப்பை அவர்கள்
22. பபியான் ரோட்ரிகோ அவர்கள்
23. மதுரையைச் சேர்ந்த இஞ்சினியர் பிஜிலி ஸாஹிப் அவர்கள்
முதலாம் குடிநீர் திட்டத்திற்கு வாரி வழங்கிய இவ்வள்ளல்களை, இந்த இரண்டாவது குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் நாம் நினைவுகூர்வோம்...
2030ஆம் ஆண்டு மக்கள் தொகையை முன்கணக்கிட்டு, தொலைநோக்கு அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்த இரண்டாம் குடிநீர் திட்டமானது எங்களது நகர்மன்ற பொறுப்புக் காலத்தில் துவங்கப்படுகின்றமைக்காக, எனது பாசத்திற்குரிய நகர்மன்ற உறுப்பினர்களும், நானும் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். எல்லாப்புகழும் இறைவனுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இத்திட்டத்திற்கான முயற்சியானது பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது என்பதை நாம் யாரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.
நம் நகர்மன்றத்தின் முன்னாள் தலைவர் திருமதி கே.எம்.இ.நாச்சி தம்பி அவர்கள் மற்றும் அவர்களது உறுப்பினர்கள்,
நம் நகர்மன்றத்தின் முன்னாள் தலைவர் அ.வஹீதா பி.எஸ்ஸி. அவர்கள் மற்றும் அவர்களது உறுப்பினர்கள்,
நம் நகர்மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி வாவு செய்யது அப்துர்ரஹ்மான் அவர்கள் மற்றும் அவர்களது உறுப்பினர்கள்
ஆகிய இவ்வனைவருக்கும் நம் நகர மக்கள் அனைவரின் சார்பிலும் நெஞ்சம் நிறைந்த நன்றியை இதோ இந்த மேடையிலேயே சமர்பிக்கின்றேன்.
இத்திட்டத்திற்காக உழைத்த - பாடுபட்ட - கோரிக்கைகளை எடுத்துரைத்த நம் ஐக்கிய பேரவை பெரியோர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும், அனைத்து பொதுநல அமைப்புகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு திட்டமானது செயல்வடிவம் பெற்று சிறப்பாக செயல்படுத்தப்படுவதில் எனது மதிப்பிற்குரிய நகராட்சி அலுவலர்களின் பங்கு மிக மிக முக்கியமானது. அந்த வகையிலே, இதற்காக பேருதவி புரிந்து வரும் நம் நகராட்சி ஆணையாளர் அவர்களுக்கும், நகராட்சி அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும், இத்திட்டத்தை வடிவமைத்த வேப்காஸ் நிறுவனத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திட்டம் குறித்து சென்னையில் நாம் சந்தித்த பொழுது முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் நல்கி தற்போது தமிழக அரசின் முதன்மைச் செயலாளராக இருக்கும் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கும், நமது நகராட்சி நிர்வாகத்துறையின் ஆணையர் திரு. சந்திரகாந்த் காம்ப்ளே ஐ.ஏ.எஸ். அவர்களுக்கும் நகராட்சி நிர்வாகத் துறை இணை ஆணையர் திரு. அஜய் யாதவ் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கும், நமது நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் திரு. மோகன் அவர்களுக்கும், நமது நகராட்சி நிர்வாக மண்டல பொறியாளர் திரு. கனகராஜ் அவர்களுக்கும், நமது பொறியாளர் (பொறுப்பு) திரு. முத்து அவர்களுக்கும், மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திட்டத்தினை சிறப்பான முறையில் நிறைவேற்றி, சீரிய பணியை ஆற்றவுள்ள ஸ்ரீராம் நிறுவனத்திற்கும், நமது ஊர் மக்கள் யாவரின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது பாசத்திற்குரிய அன்னாச்சி அமைச்சர் சீனா தானா செல்லப்பாண்டியன் அவர்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்து, நன்றி கலந்த எனது வரவேற்புரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்...
இந்த இரண்டாம் குடிநீர் திட்டமானது சிறப்பான முறையில் தங்குதடையின்றி நடைபெற எல்லா வகையிலும் உங்களுடைய மேலான ஒத்துழைப்பையும், ஆதரவையும் எதிர்பார்த்தவர்களாக நம்பிக்கையோடு நாங்கள் இருகின்றோம்...
இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்குரிய போதிய அலுவலர்கள் நமது நகராட்சியில் இல்லை. அண்மையில்தான் நமது முதல்வர் பாசத்திற்குரிய மாண்புமிகு அம்மா அவர்களால் சில நகராட்சி பணி இடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி இடங்களுக்குரிய பணியாளர்களை உடனடியாக பணி நியமனம் செய்யவதன் மூலம் இந்த இரண்டாம் குடிநீர் திட்டமானது சிறப்பாக நடைபெற, இது குறித்த தலையாய கோரிக்கையை அம்மா அவர்களிடம நிச்சயம் தாங்கள் எடுத்துச் சென்று ஆவன செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு, எமதூர் மக்களின் சார்பாக உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை உள்ளன்போடு வருக வருக என வரவேற்று எனதுரையை நிறைவு செய்கிறேன், நன்றி.
இவ்வாறு, காயல்பட்டினம் இரண்டாவது குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் உரையாற்றினார். அவரது உரையின் அசைபட (வீடியோ) பதிவைக் காண இங்கே சொடுக்குக!
கள உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் (காயல்பட்டினம்.காம்) |