காயல்பட்டினத்தில், பெரிய நெசவு தெரு வழியே ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்களின் தொடர் போக்குவரத்து காரணமாக, அச்சாலை குண்டும் குழியுமாக மிகுந்த சேதத்திற்குள்ளானது. நாளுக்கு நாள் அச்சாலை போக்குவரத்திற்குத் தகுதியற்றதாகி வந்த நிலையில், காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்து செல்ல வேண்டிய பேருந்துகள் சில வழி மாறிச் சென்ற நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளதாக அறிய முடிகிறது.
இந்நிலையில், தாயிம்பள்ளி முதல் ஐ.ஒ.பி. வங்கி வரை மற்றும் லெப்பை தம்பி சாலை பணிகளுக்கான டெண்டர் பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. 28.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த பணிகளை ஒப்பந்ததாரர்கள் எவரும் எடுக்காததால், இந்த பணிக்கான டெண்டர் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேதமுற்றுள்ள பெரிய நெசவுத் தெரு சாலை, 11.03.2013 திங்கட்கிழமையன்று தற்காலிகமாக செப்பனிடப்பட்டது. அச்சாலையின் பள்ளங்கள் மணல் கொண்டு நிரப்பப்பட்டு, பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு சமப்படுததப்பட்டது.
இப்பணியை, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார். திட்ட உதவி அலுவலர் செந்தில் குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். நகர்மன்ற உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாதீன் உடனிருந்தார்.
சாலைப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிந்தபோது, ஆறுமுகநேரி காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
படங்கள்:
A.K.இம்ரான்
மற்றும்
ஹிஜாஸ் மைந்தன் |