மருத்துவத் துறையில் உலக காயல் நல மன்றங்களை ஒருங்கிணைப்பதற்காக விவாதிக்கப்பட்டு வரும் ‘ஷிஃபா’ செயல்திட்டத்தில் இணைவதாக, சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்ற பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் துணைத்தலைவர் சாளை எஸ்.ஜியாவுத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நற்கிருபையால், தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 64ஆவது பொதுக்குழு கூட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்று முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்.
கூட்ட நிகழ்வுகள்:
இந்த கூட்டம் 08.03.2013 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின்பு, தம்மாமில் உள்ள ரோஸ் உணவக கூட்ட அரங்கில், தலைவர் டாக்டர் முஹம்மது இத்ரீஸ் மற்றும் பொதுச்செயலாளர் ஜனாப் அஹமது ரபீக் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.
சகோதரர் முஹம்மது இம்தியாஸ் அவர்களின் மகன் அதாவுல்லாஹ், இறைமறை குர்ஆனை மிக அருமையாக ஓதி கூட்டத்தை துவங்கி வைக்க, அவரின் தந்தை இம்தியாஸ் அனைவர்களையும் அகமுடன் வரவேற்று அமர்ந்தார்.
தலைமையுரை:
அதனைத் தொடர்ந்து, தலைவர் டாக்டர் முஹம்மது இத்ரீஸ் தலைமையுரையாற்றினார்.
உலகளாவிய காயல் நற்பணி மன்றங்களின் உற்சாகமிக்க தொண்டுகளால், உதவி கோரி நம் மன்றத்திற்க்கு வரும் மனுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து காணப்படுவதை அவர் தனதுரையில் எடுத்துரைத்தார்.
அத்துடன் மருத்துவ உதவிகளை ஒரு குடையின் கீழ் நிகழ்த்த தீர்மானிக்கும் SHIFA – ஷிஃபா அமைப்பின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி அவர் உரையாற்றினார்.
செயலர் உரை:
அடுத்து, மன்றத்தின் பொதுச்செயலாளர் ஜனாப் அஹமது ரபீக் உரையாற்றினார். அவர்களின் உரையில் சென்ற பொதுக்குழுவிற்கும் இந்த பொதுக்குழுவிற்கும் இடைப்பட்ட காலத்தில், மன்றத்தால் வழங்கப்பட்ட கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை பட்டியலிட்டு விவரித்தார்.
சந்தாக்களை பாக்கி இல்லாமல் செலுத்தவும், சந்தாக்களை அதிகரித்து தருமாறும் வேண்டுகோள் விடுவித்து, இந்த சந்தாக்களை வசூலிக்க அரும்பாடுபட்டு உழைக்கும் சகோதரர் முஹம்மது இப்ராஹீம் அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.
இடையில் தேநீருடன் கூடிய சிற்றுண்டி பரிமாறப்பட்டது.
‘ஷிஃபா’வில் இணைய இசைவு:
பின்பு, சகோதரர் செய்யது ஹசன் ஜாபர் அவர்கள் விரைவில், துவங்க திட்டமிட்டிருக்கும் ஒருங்கினைந்த மருத்துவ அமைப்பான ஷிஃபா-வைப்பற்றி விளக்க உரை நிகழ்த்தினார்.
உறுப்பினர்களின் நீண்ட பொறுப்பான விவாதங்களுக்கு பிறகு, தம்மாம் காயல் நற்பணி மன்றம் இந்த ஷிஃபா அமைப்பில் அங்கம் வகித்து, அதற்கு உதவிக்கரம் நீட்ட ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
மார்க்க சொற்பொழிவு:
இதனைத்தொடர்ந்து மரியாதைக்குரிய மௌலவி முஹம்மது நூஹு ஆலிம் மஹ்லரி அவர்களின் சிறப்பான உரை அனைவர்களின் நெஞ்சையும் ஊடுருவியதில் வியப்பு இல்லை.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
புதிதாய் தம்மாம் பகுதிக்கு வேலைக்கு வந்து இருந்த நான்கு சகோதரர்கள் தங்களை அனைவர்களுக்கும் அறிமுகப்படுத்திக்கொண்டு, மன்றதில் இணைந்தார்கள்.
ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி:
பின்பு, பல சிரமங்களுக்கு இடையிலும் இந்த கூட்டத்திற்கு வந்து சிறப்பித்த அனைவர்களையும், உதவி புரிந்த அனைத்து நல்ல உள்ளங்களையும் நன்றி கூறியதுடன், இம்மாதிரி முக்கிய தருணங்களிலும் வைபவங்களிலும் எப்போதும் அன்புடன் உதவிக்கரம் நீட்டும் சகோதரர் மதிப்புக்குரிய ஜனாப் அப்பாஸ் பாய், மற்றும் சகோதரர் ஜனாப் முபாரக் ஹுசைன் அவர்களையும் பெருமைப்பட நன்றி பாராட்டி, இறை பிராத்தனையுடன் நிறைவு செய்தார் தலைவர் டாக்டர் இத்ரீஸ் அவர்கள்.
மகளிர் பங்கேற்பு:
தாய்மார்களுக்குத் தனி இடம், நிகழ்வுகளைக் கண்டு களிக்க தொலைக்காட்சி பெட்டி.. இவற்றால் பொதுக்குழு இன்னும் மெருகேறியது.
இரவுணவு:
இக்கூட்டத்தில், மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
அனைவரும் இரவு உணவு அருந்திவிட்டு மனநிறைவுடன் அடுத்த ஒன்றுகூடலை நினைத்து மகிழ்வுடன் விடைபெற்று சென்றார்கள். வல்ல இறைவனுக்கே எல்லாப் புகழும்.
இவ்வாறு, தம்மாம் காயல் நற்பணி மன்ற துணைத்தலைவர் சாளை எஸ்.ஜியாவுத்தீன் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |