மருத்துவத் துறையில் உலக காயல் நல மன்றங்களை ஒருங்கிணைப்பதற்காக விவாதிக்கப்பட்டு வரும் ‘ஷிஃபா’ செயல்திட்டத்தில் இணைவதாக, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழுவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இறையருளால் எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் செயற்குழு கூட்டம் 10.03.2013 ஞாயிறு மாலை விளக்கு குடும்பத்தார் இல்லத்தில் நடைபெற்றது.
கூட்ட நிகழ்வுகள்:
ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பேரவைத் தலைவர் எம்.எம்.எஸ்.காழி அலாவுத்தீன் பேரவை செயற்குழுவின் அங்கத்தினர், சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
ஹாங்காங் சர்வதேச நகை கண்காட்சியில் கலந்துகொள்ள வந்திருந்த (இலங்கை) காவாலங்கா தலைவர் ஹாஜி எம்.எஸ். ஷாஜஹான், உறுப்பினர் மவ்லவீ மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, (தாய்லாந்து) தக்வா மற்றும் இக்ரா தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், தக்வா செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் வரவு – செலவு கணக்கறிக்கை:
கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கையை செயலாளர் எஸ்.எம்.ஜே.முஹம்மத் பாக்கர் சமர்பித்தார். பின்னர், பேரவையின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை பொருளாளர் எம்.எம்.எஸ்.ஷேக் மொஹ்தூம் சமர்ப்பிக்க, கூட்டம் ஒருமனதாக ஒப்புதலளித்தது.
சிறப்பு விருந்தினர்கள் உரை:
அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினர். துவக்கமாக உரையாற்றிய தக்வா மற்றும் இக்ராஃ தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் அவர்கள், ஹாங்காங், பாங்காக் மற்றும் உலகளவில் வாழும் நமது காயல் மக்கள் ஆற்றும் பொது நல சேவைகளை தனதுரையில் நினைவு கூர்ந்தார், குறிப்பாக ஹாங்காங் கவ்லூன் மஸ்ஜித் கட்டுமானத்தில் காயலர்களின் பெரும் பங்களிப்பை நினைவுகூர்ந்து பேசினார். இதுபோல் நமது இளைய தலைமுறையினரும் பொது நல சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டியும், ஒற்றுமையுடன் செயலாற்றவேண்டியும் அவர் கேட்டுக் கொண்டார்.
இக்ராஃவில் ஆயுட்கால உறுப்பினர்கள் ஆகும்படி அங்கத்தினருக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். அக்கூட்டத்திலேயே 8 செயற்குழு உறுப்பினர்கள் இக்ராவில் ஆயுட்கால உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டார்கள்.
தொடர்ந்து காவாலங்கா தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் உரையாற்றுகையில், 2011இல் இலங்கையில் இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹாங்காங் பேரவையால் வழங்கப்பட்ட நன்கொடையை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
பிறப்பிடத்து மக்களுக்கு தேவையறிந்து உதவிக்கரம் நீட்டுவதில் உலக காயல் நலமன்றங்களின் சேவைகளும் செயல்பாடுகளும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாக பாரட்டினார்கள். அதிலும் குறிப்பாக காவாலங்காவின் செயல்பாடுகள் சற்றே மாறுபட்டு நம் பிறப்பிடத்து மக்களுக்கு மட்டுமல்லாது தங்களின் வாழ்விடத்து மக்களுக்குத் தேவையான சந்தர்பங்களில் உதவிகள் செய்யவேண்டிய நிலையில் மன்றம் இருப்பத்தையும் குறிப்பிட்டார்கள்.
மேலும் அனைத்து உலக காயல் நல மன்றங்களும் தங்களுக்கிடையில் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதின் மூலமாகவும் சரியான தகவல் பரிமாற்றதின் மூலம் உதவிகள் வீணடிக்கப்படாமல் சரியான முறையில் உரியவர்களுக்கு சென்றடைய செய்யவேண்டும் அதற்கான முயற்சிகளை நல மன்றங்கள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள்.
‘ஷிஃபா’ அறிமுகம்:
மைக்ரோ காயல் ஹாங்காங் பிரதிநிதி ஜனாப் எஸ்.ஏ.நூஹ், மருத்துவ உதவிகளுக்காக புதிதாகத் துவக்கிட விவாதிக்கப்பட்டு வரும் ‘ஷிஃபா’ அமைப்பைப் பற்றிய விபரங்களையும், அது தொடர்பான சமீபத்திய Conference callஇல் (02.03.2013) கலந்து கொண்ட விபரங்கங்களையும் விவரித்து பேசினார். தொடர்ந்து ஜனாப் எஸ்.ஏ.நூஹ் மற்றும் தக்வா செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் ஆகியோர் ‘ஷிஃபா’ பற்றிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தனர்.
நகர்நலன் குறித்த உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - ‘ஷிஃபா’வில் இணைய இசைவு:
புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த மருத்துவத்துறை கூட்டமைப்பான “ஷிஃபா”வில் இணைந்து செயல்பட ஒப்புதல் வழங்கப்பட்டது.
தீர்மானம் 2 - நலத்திட்ட உதவிக்கு நிதியொதுக்கீடு:
சிறுதொழில் செய்வதற்காக மூன்று சக்கர வாகனத்தில் மோட்டார் பொருத்த உதவி கோரி பெறப்பட்ட விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.
தீர்மானம் 3 - புதிய துணைத்தலைவர்:
தற்போதைய துணைத் தலைவர்களில் ஒருவரான பிரபு எஸ்.என்.ஷூஐபு தற்போது தாயகத்திற்கு குடிபெயர்ந்துள்ளதால் அவருக்கு மாற்றாக புதிய துணைத்தலைவராக ஜனாப் யு.நூகு தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது,
தீர்மானம் 4 - இன்பச் சிற்றுலா:
வரும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் பேரவை சார்பில் சிற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக துணைத்தலைவர்கள் ஜனாப் யு.நூகு மற்றும் ஜனாப் எம்.எஸ்.சதக் மீரான் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சிற்றுலா பற்றிய விபரங்கள் உறுப்பினர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் எஸ்.எம்.ஜே. முஹம்மத் பாக்கர் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில், பேரவையின் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு இடமளித்து, கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் சுவையான சிற்றுண்டி பரிமாறிய அமைப்பின் புதிய துணைத்தலைவர் ஜனாப் யு.நூஹ் மற்றும் விளக்கு குடும்பத்தார்களுக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் மவ்லவீ மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ அவர்களின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.M.J.முஹம்மத் பாக்கர்
செயலாளர்
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் |