சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 70 வது செயற்குழு கூட்டம்
சென்ற 15 ம் தேதி வெள்ளி மாலை மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா பலதில் உள்ள அல்கய்யாம் ஹோட்டலின் உணவரங்கத்தில் சகோ.குளம்,எம்.எ.அஹ்மது முஹ்யித்தீன் தலைமையில், சகோ.அரபி எம்.அய்.முஹம்மது ஷுஅய்ப் கிராஅத் ஓதிட ஆறாவது அமர்வுக்காக ( 2013-2014 ஆண்டுக்காக)தேர்ந்தேடுக்க்ப்பட்ட
புதிய நிர்வாக குழுவினர்களின் முதலாவது கூட்டமான இதில் கலந்து கொண்ட அனைவர்களையும் சகோ.நஹ்வி,எ.எம்.ஈசா ஜக்கரிய்யா அகமகிழ வரவேற்க கூட்டம் இனிதே ஆரம்பமானது.
தலைமையுரை:
மிகசிறப்பாக நடந்து முடிந்த நம்மன்றப் பொதுக்குழு மற்றும் காயல் குடும்ப சங்கம நிகழ்ச்சியின் நிறை குறைகளை அறியத்தருமாறும்; மேலும் இச்செயற்குழுவில் முக்கிய விவாதப்பொருளாக நகரின் மருத்துவம் மற்றும் சுகாதாரத்திற்கான தனி அமைப்பு 'ஷிபாஃ' குறித்து என்றும்; அதன் மேலதிக செய்திகளை மன்றத்துணை தலைவரும் நம் மன்றத்தின் 'ஷிஃபா' பிரதிநிதியுமான மருத்துவர் எம்.எ.முஹம்மது ஜியாது அவர்கள் தெளிவாக தருவார்கள் என்றும் ஷிஃபா குறித்து உறுப்பினர்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன எனவும் அது பற்றிய தங்களது பதிவுகளை தெரிவிக்கலாமென்றும் கேட்டுகொண்டார் மன்றத்தலைவர் குளம் எம்.எ.அஹ்மது முஹ்யித்தீன்.
மன்றசெயல்பாடுகள்:
கடந்த கூட்டங்களின் தீர்மானம்,மன்றம் அளித்த உதவிகளின் விபரம் அனைவர்களின் பாராடுகளையும் பெற்று நடந்து முடிந்த 29 வது பொதுக்குழு மேலும் அதன் நிமித்தம் நடந்தேறிய மன்றப்பணிகள் போன்ற செய்திகளை சுருக்கமாக தந்து அமர்ந்தார் மன்றச்செயலர் சகோ.சட்னி எஸ்.எ.கே.செய்யது மீரான்.
தொடந்து பேசிய மன்றச்செயலர் சகோ.எம்.எ.செய்யிது இப்ராஹீம்; நகரில் நிலவும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை நம் மக்களிடம் அதிகமாக தெரியப்படுத்த வேண்டுமென்றும்; நம் நகரில் ஏழைஎளிய மக்கள் உரிய மருத்துவ உதவிகளை தடையின்றி பெரும் பொருட்டு அவர்களுக்கான 'தனியார் மற்றும் அரசு சார்ந்த மருத்துவ காப்பீட்டு திட்டம்' குறித்தும் நாம் ஆய்வு செய்ய வேண்டுமென்றும்;
விரைவில் நகரில் அமையவிருக்கும் 'ஷிஃபா' கூட்டமைப்பு இது போன்ற உயரிய பணிகளை முன்னெடுத்து செய்ய வேண்டுமென்றும் கூறினார், மேலும்; ஷிஃபா உருவாக்கம் குறித்த உறுப்பினர்களின் அழகிய கருத்துக்களை தாராளமாக முன்வைக்குமாறும் வேண்டிக்கொண்டார்.
'ஷிஃபா' பற்றி:
நகரின் முக்கிய தேவையான ஷிஃபா குறித்த செய்திகளை அறியத்தந்த மருத்துவர் எம்.எ.முஹம்மது ஜியாது; அதன் அவசியம், அதன் பணிகள், அதன் நோக்கம், அதன் திட்டம் மேலும்; அண்மையில் SKYPE மூலம் காயல் சகோதரர்களிடம் ஷிபா குறித்து கலந்துரையாடிய பதிவுகள், மற்றும் ஷிஃபாவில் நம் மன்றத்தின் பங்களிப்பு போன்ற பல விபரங்களை மிகதெளிவாக விளக்கினார்.
நிதிநிலை:
நடந்தேறிய பொதுக்குழுவில் தாரளமாக வசூலான சந்தா மற்றும் நன்கொடை வரவு,
நிகழ்ச்சியின் வரவு,செலவுகள் மற்றும் மன்றத்தின் கல்வி, மருத்துவத்திற்கான நிதி ஒதுக்கீடு போக தற்போதைய நிதி நிலை போன்ற இருப்பு விடுப்பு பட்டியலை மிக துல்லியமாக சமர்பித்தார் மன்றப் பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம்.
உதவிகள்:
மன்றத்தின் பயன் வேண்டி வந்திருந்த மனுக்கள் அனைத்தும் உறுப்பினர்களால் வாசிக்கப்பட்டு மருத்துவர் எம்.எ.முஹம்மது ஜியாது பரிசீலனை மற்றும் பரிந்துரைகளுடன் உதவிகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி போலியோ, மூளை வளர்ச்சியின்மை,விபத்தில் எலும்பு முறிவு,பக்கவாதம், பிசியோதெரபி போன்ற பல சுகவீனகளுக்காக தொடர் சிகிட்சை பெற்றுவரும் 9 பயனாளிகள் மற்றும்; இதயத்தில் அடைப்பு, இரண்டு கிட்னிகளும் செயல் இழப்பு மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் போன்ற மிக பாரிய சுகவீனத்திற்குள்ளாகியிருக்கும் 4 பயனாளிகள் என 13 பயனாளிகளுக்கு மருத்துவ உதவிகள் அறிவிக்கப்பட்டு அவர்கள் பரிபூரண சுகம் பெற வல்லோனிடம் பிரார்த்திக்கப்பட்டது.
நீண்ட நெடிய கருத்துப்பகிர்வுகள்:
நம்நகரின் நீண்ட கால வேட்கையான மருத்துவம் மற்றும் சுகாதாரத்திற்கான தனி அமைப்பான 'ஷிஃபா' குறித்த உறுப்பினர்களின் கருத்துப்பகிர்வுகள் ஆழமாகவும், அறிவுப்பூர்வமாகவும்,அழகான முறையில் நடந்தேறியது. தொலை நோக்கு தூயசிந்தனைகளுடன், பல சிறப்பான கருத்துக்களை அனைத்து உறுப்பினர்களும் பதிவு செய்தனர். அனைத்து உறுப்பினர்களின் சீரிய சிந்தனையில் உருவான கருத்துக்கள்
யாவும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நீண்ட நெடிய கருத்து பரிமாற்றத்திற்குப்பின் அனைவரின் ஒருமித்த கருத்தொற்றுமையின் அடிப்படையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
1. அனைத்துலக காயல் நல மன்றங்களின் ஒருமித்த கருத்தோடு இன்ஷாஅல்லாஹ்
உருவாக இருக்கும் மருத்துவம் மற்றும் சுகாதாரத்திற்கான கூட்டமைப்பு 'ஷிஃபா' வுக்கு நமது ஜித்தா காயல் நற்பணி மன்றம் முழு ஆதரவை அளிக்கும்.
2. நகரில் அமையவிருக்கும் 'ஷிஃபா' கூட்டமைப்புக்கு அதன் துவக்க கால நிர்வாக செலவுகளுக்காக ரூபாய் ஐம்பது ஆயிரத்தை (50,000/=) நமது ஜித்தா காயல் நற்பணி மன்றம் வழங்கும் இன்ஷாஅல்லாஹ்.
3. அல்லாஹ்வின் நல்லருளால் கடந்த மாதம் பிப்ரவரி,எட்டாம் தேதி நம் அனைவர்களின் மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாக நடந்தேறிய 29-வது பொதுக்குழு காயல் சங்கம நிகழ்சிகளுக்கு எல்லாவித அனுசரணைகள் (SPONSORS) அளித்த அனைத்து கொடை உள்ளங்களுக்கும், விழாவிற்கான ஏற்பாடு, ஒருங்கிணைப்பு, நிகழ்ச்சி அமைப்பு போன்ற அனைத்து வழிகளிலும் உழைத்த,உதவிய அன்பு நெஞ்சங்களுக்கும், இனிய இந்நிகழ்வில் சங்கமித்த ஜித்தா,மக்கா மற்றும் யான்பு
உறுப்பினர்களுக்கும்,சிறப்பு விருந்தினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் உள்ளன்புடன் உரித்தாக்கி கொள்கின்றோம்.
நன்றியுரை:
சகோ.சொளுக்கு,எஸ்.எம்.அய்.செய்யிது முஹம்மது சாஹிப் நன்றி கூற, சகோ. எஸ்.எஸ்.ஜஃபார் சாதிக் பிரார்த்திக்க துஆ கஃப்பாராவுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது.
நிகழ்ச்சி இடஏற்பாடு,மற்றும் இரவுணவு அனுசரணைகளை மிகச்சிறப்பாக செய்திருந்தார் சகோ.நஹ்வி,எ.எம்.ஈசா ஜக்கரிய்யா.புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!
தகவல் மற்றும் நிழற்படங்கள்:
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
|