காயல்பட்டினம் நகராட்சி மற்றும் காயாமொழி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) உள்ளிட்ட கடற்கரையோரப் பகுதிகளில் இன்று காலை 08.00 மணி முதல் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி (mass cleaning) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் நீர் தேங்குவதால் அதில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனைத் தவிர்த்திடுவதற்காக, குடியிருப்புப் பகுதிகளில் ஆங்காங்கே சிதறிக் கிடந்த சிரட்டை, தேனீர் கோப்பைகள், டயர்கள் உள்ளிட்டவற்றை, காயல்பட்டினம் நகராட்சியின் துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லெட்சுமி தலைமையில் துப்புரவுப் பணியாளர்கள் சேகரித்து, நகராட்சி குப்பை சேகரிப்பு வண்டியில் கொட்டி எடுத்துச் சென்றனர்.
காயாமொழி ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர் ராணி டப்ஸ், அதன் காயல்பட்டினம் பகுதி சுகாதார ஆய்வாளர் சோமசுந்தரம், காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் ஆகியோர் இப்பணியை மேற்பார்வையிட்டனர். |