சஊதி அரபிய்யா சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.யுடன் ரியாத் காயல் நற்பணி மன்றத்தினர் நேரில் சந்தித்து, நகர்நலன் குறித்த கோரிக்கைகளை முன்வைத்து, கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொண்டனர்.
இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள் 21-02-2013 அன்று, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப்.எம்.அப்துல் ரஹ்மான் அவர்களை ரியாதில் சந்தித்தனர்.
இந்தக் கூட்டத்தில், உறுப்பினர்கள் DCW விரிவாக்க திட்டம் மற்றும் அதன் சுகாதார கேடு பற்றி நாடாளுமன்ற உறுப்பினரிடம் அவர்கள் விளக்கினர். மேலும், இது சம்மந்தமான விரிவான ஆவணங்கள் மற்றும் உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவையும் அவரிடம் சமர்ப்பித்தனர்.
பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப்.எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள், இதுபற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் செல்வதாகக் கூறியதுடன், தன்னாலான எல்லா வழிகளிலும் உதவி செய்வதாகவும் உறுதியளித்தார்.
இக்கூட்டத்தில் எம்.பி., அவர்கள் காயலர்களின் மனிதாபிமான சேவைகளை பாராட்டியதுடன், நமது ஊர் ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். நம் நகராட்சி நிகழ்வுகளைப் பற்றி கவலை தெரிவித்த அவர், உலகம் முழுவதும் உள்ள காயல் நற்பணி மன்ற உறுப்பினர்கள் சேர்ந்து ஓர் இணக்கமான சூழ்நிலையைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இதன் மூலம், மத்திய, மற்றும் மாநில அரசாங்கங்களின் வளர்ச்சிப் பணிகளை - எந்தத் தடைகளும், தாமதமும் இல்லாமல் நகரில் செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.
இக்கூட்டத்தில், மன்ற உறுப்பினர்கள் சூஃபி இபுறஹீம், முகமது ஹசன், அஹ்மத் ஸாலிஹ், ஆதம் அபுல்ஹஸன், ஷெய்கு தாவூத் இத்ரீஸ், முஹம்மது நூஹ் மற்றும் ஹபீப் முஹம்மது முஹ்ஸின், குழந்தை நல மருத்துவர் இப்ராகிம் ஆகியோர் கலந்து கொன்டனர்.
இச்சந்திப்பினை ஏற்பாடு செய்த பொது குழு உறுப்பினர் S.M. முகமது நாசர் (Lalpet) அவர்களுக்கும் RKWA நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு, ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |