செய்தி எண் (ID #) 10446 | | |
திங்கள், மார்ச் 18, 2013 |
நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 9218 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (42) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினம் நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபரின் தேவையற்ற தலையீடு ஒழிக்கப்பட வேண்டுமென, “காயல்பட்டினம் நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்ட”த்தில் சிறப்புரையாற்றிய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேசினார்.
“காயல்பட்டினம் நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டம்” என்ற தலைப்பில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் ஏற்பாட்டில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், 17.03.2013 ஞாயிற்றுக்கிழமை இரவு 08.00 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இரவு 07.00 மணியிலிருந்தே பொதுமக்கள் கூட்ட நிகழ்விடத்தில் திரண்டிருந்தனர்.
நகரின் பொதுநல ஆர்வலர் ஹாஜி எஸ்.ஏ.மெய்தீன் கூட்ட நிகழ்வுகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஹிஷாம் இறைமறை வசனங்களையோதி, கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, அனைவரையும் வரவேற்றுப் பேசிய காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், காயல்பட்டினம் நகராட்சி நிகழ்வுகள் குறித்து விளக்கவுரையாற்றினார்.
நகரில் குடிநீர் வினியோகம், குப்பை சேகரிப்பு, தெரு விளக்கு பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படைப் பணிகள் சிறப்புற நடைபெறுவதற்காக தான் மேற்கொண்ட முயற்சிகளைப் பட்டியலிட்டுப் பேசிய அவர், பெரும்பாலான நேரங்களில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவேயில்லை என்பதோடு, அப்பணிகள் நடைபெறாதிருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மறைமுகமாகச் செய்துகொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவராக தான் பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை லஞ்சம், ஊழலுக்கு தான் சிறிதளவும் துணை நின்றதில்லை என்றும், தனது தலைவர் பதவியைப் பயன்படுத்தி தன் சொந்தத் தேவைக்காக ஒரு பைசாவும் சேர்த்ததில்லை என்றும், திருமறை குர்ஆனை கையிலேந்தி - இறைவன் மீது ஆணையிட்டுக் கூறிய நகர்மன்றத் தலைவர், இதே போன்று நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் சத்தியம் செய்ய முன்வருவார்களா என்று வினா எழுப்பினார்.
தன் பதவிக்காலம் என்று முடிவடையும் என்பது குறித்து தான் சிறிதும் சிந்தித்ததில்லை என்றும், தான் சிறப்பாக செயல்படுவதாக இறைவன் கருதும் வரை நகர்மன்றத் தலைவர் பொறுப்பிலிருந்து தன்னை யாரும் நீக்க இயலாது என்றும், தன்னை விட சிறந்த தலைமையைத் தர இறைவன் நாடும்போது அவன்தான் தன்னை வீட்டுக்கு அனுப்புவான் என்றும் கூறிய அவர், தனி நபருக்குக் கட்டுப்பட நகர்மன்றத் தலைவரோ, உறுப்பினர்களோ அவருக்கு அடிமைகளல்ல என்றும் கூறினார்.
நகராட்சியில் பல பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், செயற்கையாக பல பணிகள் முடக்கப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், விரைவில் குறைகள் களையப்பட்டு நிர்வாகம் சீரடையவில்லையெனில், சாகும் வரை உண்ணா நோன்பிருக்கவும் தான் ஆயத்தமாக உள்ளதாக அவர் கூறினார்.
தன்னை விட பன்மடங்கு இடைஞ்சல்களை சந்தித்து வரும் தமிழக முதல்வரின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் - மக்கள் நலன் கருதி தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளப் போவதாகவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
அவரது உரையின் அசைபட பதிவுகளைக் காண இங்கே சொடுக்குக!
கூட்டத்தின் துவக்கத்திலும், நிறைவிலும் - காயல்பட்டினம் புறநகர் வட்டார நலக் குழுவினரின் சார்பில் நகர்மன்றத் தலைவருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது. நகர்மன்றத் தலைவரின் கணவர் ஷேக் மேடையில் உடனிருந்தார்.
நன்றியுரை, துஆ - பிரார்த்தனையுடன், இரவு 10.30 மணியளவில் பொதுக்கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான பொதுமக்கள் குழுமியிருந்தனர்.
படங்களில் உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் (காயல்பட்டணம்.காம்)
அசைபடப் பதிவு:
வீனஸ் ஸ்டூடியோ
ஷஃபீயுல்லாஹ்
மற்றும்
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல் |