காயல்பட்டினம் நகர்நலப் பணிகளை முன்னிறுத்தி, சென்னை வாழ் காயலர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் அமைப்பு “காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம்” KCGC. இவ்வமைப்பின் நகர்நலப் பணிகளுக்கு இதுநாள் வரை தனித்தனி குழுக்கள் வரையறுக்கப்பட்டு, அனைத்துக் குழுக்கள் நிர்வாகத்தின் கீழ் அது இயங்கி வந்தது.
இந்நிலையில், முறையாக தேர்தல் நடத்தி அமைப்பிற்கான புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுப்பதென, 09.02.2013 அன்று சென்னையில் நடைபெற்ற - அமைப்பின் அனைத்துக் குழு கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில், மின்னஞ்சல் முறையில் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, KCGC அமைப்பின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
காயல்பட்டணம் சென்னை வழிகாட்டு மையத்தின் (KCGC) நிர்வாகப் பொறுப்புகளுக்கான தேர்தல் இறையருளால் நடைபெற்று முடிந்துள்ளது.
மின்னஞ்சல் முறையில் தேர்தல்:
பெங்களூரில் உள்ள திருக்குர்ஆன் வாசகர் வட்டத்தின் செயல்வீரரான சாதிக் பாட்ஷா B.E., M.B.A., அவர்கள் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தினார்.
மின்னஞ்சல் முறையில் நடத்தப்பட்ட இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இம்மாதம் 23ஆம் தேதி துவங்கி, 28ஆம் தேதியன்று நிறைவுற்றது.
வாக்கு எண்ணிக்கை:
28.03.2013 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு, அன்று இரவு 07.00 மணியளவில், அமைப்பின் அனைத்துக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
நிர்வாகப் பொறுப்புகளுக்கான 7 பேரைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற இத்தேர்தலில், 23 பேர் கொண்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களின் பட்டியல், குழுவில் உள்ள அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் சென்ற மார்ச் 23 அன்று அனுப்பி வைக்கப்பட்டது.
புதிய நிர்வாகக் குழு தேர்வு:
அதனடிப்படையில், பின்வருமாறு 7 பேர் நிர்வாகக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
1. சகோ. எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்
2. சகோ. ஸ்மார்ட் அப்துல் காதிர்
3. சகோ. குளம் முஹம்மத் தம்பி
4. சகோ. எச்.என்.ஸதக்கத்துல்லாஹ்
5. சகோ. அஹ்மத் ரிஃபாய் (ஆடிட்டர்)
6. சகோ. எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ்
7. சகோ. பல்லாக் சுலைமான்
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 7 பேரும் ஒன்றுகூடி, அமைப்பிற்கான
தலைவர்,
செயலாளர்,
பொருளாளர்,
இரண்டு துணைத் தலைவர்கள்,
இரண்டு துணைச் செயலாளர்கள்
ஆகியோரைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இவ்வுறுப்பினர்கள் தத்தம் பொறுப்புகளை உளத்தூய்மையுடன் செயல்படுத்திட அனைவரும் பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வல்ல அல்லாஹ் நம் எண்ணங்களைத் தூய்மையாக்கி, நம் காரியங்களை சீராக்கி, ஈருலகிலும் நமக்கு வெற்றியைத் தந்தருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு, KCGC நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |