தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நேற்று மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆலையில் வேலை பார்க்கும் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு திரண்டு வந்தனர்.
பின்னர், அவர்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியிடம் மனு அளித்தனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நம்பி ஆயிரம் நிரந்தரப் பணியாளர்களும், இரண்டாயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். மேலும் மறைமுகமாக 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆலை திடீரென மூடப்பட்டதால் ஊழியர்களும், ஆலையை நம்பி சிறு தொழில்கள் புரிவோர் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். எனவே ஆலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரியும் ஊழியர்களின் குடும்பத்தினர், இன்று காலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்திற்கு பேரணியாகச் சென்று மனு அளித்துள்ளனர். சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறும், அங்கு பணிபுரியும் தங்கள் உறவினர்களுக்கு பணியில்லாது போவதால், வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் போகும் என்றும் அவர்கள் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் |