தூத்துக்குடி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தலைமையில் இன்று காலையில் நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறிய நச்சு வாயு தொடர்பாக, மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரியம் சரியான தகவலை அளிக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையும் ஆர்.டி.ஓ.விடம் பொய்யான தகவலையே அளித்துள்ளது.
பின்னர் சென்னையிலிருந்து வந்த மாசுக்ட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையின் புகைபோக்கியில் ஆய்வு செய்தபோது, 1250 மில்லி கிராம் என்ற - அனுமதிக்கப்பட்ட அளவை மீறி, 2900 மில்லி கிராம் நச்சு வாயுவை வெளியேற்றியது தெரிய வந்துள்ளது. நச்சு வாயுவின் பாதிப்பை நானே உணர்ந்தேன்.
மேலும் இது தொடர்பாக தூத்துக்குடியிலுள்ள 3 சங்கங்களும், 12 தனி நபர்களும் ஸ்டெர்லைட் ஆலை மீது புகார் அளித்துள்ளனர். புகாரளித்தவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டு, இன்னும் ஒரிரு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
எங்களது உத்தரவை ஆலை நிர்வாகத்தால் ரத்து செய்ய முடியாது. இந்த உத்தரவிற்கு தடை பெறவோ, ஆலையைத் திறக்கவோ நீதிமன்றத்தை மட்டுமே ஆலை நிர்வாகம் அணுக முடியும்.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |