ஸ்டெர்லைட் ஆலையைப் போல - பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையையும் மூட, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்று கோரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதுடன், கட்சியின் மாநில துணைச் செயலாளராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள - காயல்பட்டினத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ-க்கு வரவேற்பும் அளிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை பொதுக்குழுக் கூட்டம், 31.03.2013 ஞாயிற்றுக்கிழமை இரவு 08.30 மணிக்கு, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள - கட்சியின் அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸிலில், நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில், மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கட்சியின் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், முஸ்லிம் லீக் மாநில தலைமையின் உத்தரவுப்படி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ஏப்ரல் 02ஆம் தேதியன்று (இன்று) தூத்துக்குடியில் நடத்தப்படவிருக்கும் கோரிக்கைப் பேரணியில் கலந்துகொள்ள காயல்பட்டினத்திலிருந்து செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது.
அதனையொட்டி, கட்சியின் நகர துணைச் செயலாளர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, காயிதேமில்லத் பேரவை நகர அமைப்பாளர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், மாணவரணியைச் சேர்ந்த ஷேக் அப்துல் காதிர், இஜாஸ், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாவட்ட அமைப்பாளர் ஹாஜி ஆர்.பி.ஷம்சுத்தீன் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர். பின்னர், முன்னிலை வகித்த மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ - அண்மையில் கட்சியின் மாநில துணைச் செயலாளராக பொறுப்பேற்றமைக்காக வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அவர் சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது:-
கடந்த 23.03.2013 அன்று நச்சு வாயுவை வெளியேற்றி, பொதுமக்களை பாதித்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட மாவட்ட ஆட்சியரால் உத்தரவிடப்பட்டு, அந்த ஆலைக்கு மின் வினியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையைப் போலவே காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை - பல்லாண்டு காலமாக காற்றிலும், கடலிலும், நிலத்திலும் மாசுகளைக் கலந்து, பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும், நகர பொதுநல அமைப்புகள் சார்பிலும் பலமுறை அரசுக்கு முறையீடுகள் செய்யப்பட்டும், அந்த ஆலை மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, பொதுமக்களை பாதித்த ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது போல, டி.சி.டபிள்யு. தொழிற்சாலையையும் மூட, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் உத்தரவிட வேண்டும் என இக்கூட்டம் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இறுதியாக, நகர பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூற, ஹாஜி எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா துஆவுக்குப் பின், ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார், ஹாஜி வாவு சித்தீக், ஹாஜி மொகுதூம் கண் ஸாஹிப் உள்ளிட்ட மூத்த பிரமுகர்களும், பெத்தப்பா சுல்தான், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், ஹாஃபிழ் அப்துல் ஹக் ஃபைஸல் உள்ளிட்ட மாவட்ட - நகர நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |