முஸ்லிம்களுக்கு கல்வி - வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு, முழு மதுவிலக்கு, நீண்டகால முஸ்லிம் சிறைவாகள் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தூத்துக்குடியில் நடத்தப்பட்ட கோரிக்கைப் பேரணியில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். விபரம் வருமாறு:-
கல்வி, வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு மத்திய அரசு 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்தல், மாநில அரசு - ஏற்கனவே உள்ள 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தல், இந்தியா முழுவதும் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தல், பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த முஸ்லிம் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், இம்மாதம் 02ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்பேரணியில் கலந்துகொள்வதற்காக, காயல்பட்டினத்திலிருந்து முஸ்லிம் லீக் கட்சியினரும், நகர பொதுமக்களும் 28 வாகனங்களில், அன்று மதியம் 03.00 மணியளவில், காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலை - அலியார் தெரு சந்திப்பிலிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு, மாலை 04.00 மணியளவில் நிகழ்விடம் சேர்ந்தனர்.
தூத்துக்குடி பழைய துறைமுகம் முன்பு தொடங்கிய பேரணிக்கு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் காயல் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, மாவட்ட தலைவர் பி.மீராசா, மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத்திலுள்ள அனைத்து ஜமாஅத்துகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் மக்கள் பங்கேற்ற பேரணி, அன்று மாலை 04.00 மணியளவில் தூத்துக்குடி விஇ ரோடு, ஜின் பாக்டரி ரோடு, பாலவிநாயகர் கோவில் தெரு வழியாகச் சென்று, மாலை 05.00 மணியளவில் ராஜாஜி பூங்காவை வந்தடைந்தது. அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் பி.மீராசா மரைக்காயர் நன்றி கூறினார்.
பேரணியின்போது, காயல்பட்டினத்தைச் சேர்ந்த கட்சி உறுப்பினர் ஒருவர் முஸ்லிம் லீக் சின்னமான ‘ஏணி’யை பி.வி.சி. குழாய்களால் வடிவமைத்து, சுமந்து சென்றது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.மீராசா, மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட பொருளாளர் வடக்கு ஆத்தூர் ஷாஹுல் ஹமீத், தூத்துக்குடி மாநகர தலைவர் நவ்ரங் சஹாப்தீன், மாநகர செயலாளர் உவைஸ், மஸ்தான், கனீ முஹம்மத், காலித், காயல்பட்டினம் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், சாத்தான்குளம் கவுன்சிலர் இஸ்மாஈல், புறையூர் ஹனீஃபா, கேம்பலாபாத் அபுல்ஹஸன், கோவில்பட்டி திவான் பாஷா, தெற்கு ஆத்தூர் செய்யித் அப்பாஸ், எல்.இ.அப்துல் காதிர், வடக்கு ஆத்தூர் ஷாஹுல் ஹமீத், முத்தையாபுரம் முஸ்தஃபா, ஆசிரியர் மு.அப்துல் ரசாக், மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் எஸ்.கே.ஸாலிஹ், இம்ரான் அரபி உட்பட, கட்சியின் மாவட்ட - நகர நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
பேரணி மற்றும் செய்தியாளர் சந்திப்பு நிகழ்வுகளின்போது பதிவுசெய்யப்பட்ட அசைபட காட்சிகளைக் காண கீழ்க்காணும் இணைப்புகளில் சொடுக்குக!
பாகம் 1 - பேரணி
பாகம் 2 - பேரணி
பாகம் 3 - செய்தியாளர் சந்திப்பு
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 11:41 / 06.04.2013] |