நடப்பு ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படவுள்ள - மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தல், அண்மையில், தொலைதொடர்பு மூலம் - காயல்பட்டினத்திலுள்ள மார்க்க அறிஞர்கள் மூலம் திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் போட்டி நடத்தியமை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுவில் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
கூட்ட நிகழ்வுகள்:
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளாளல், எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 29.03.2013 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில், மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் பி.ஏ.ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதி நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.
தலைமையுரை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் வரவேற்புரையாற்றினார். கடந்த இரண்டாண்டு காலமாக, தனது தலைமையில் மன்றத்தால் மேற்கொள்ளப்பட்ட நகர்நலப் பணிகள் குறித்து விளக்கிப் பேசிய அவர், அதுகுறித்த தனது அனுபவங்களை கூட்டத்தில் பகிர்ந்துகொண்டதுடன், தன் பொறுப்புக் காலத்தில் முழு ஒத்துழைப்பளித்த மன்றத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
கூட்ட ஒருங்கிணைப்பாளர் உரை:
அவரைத் தொடர்ந்து, நடப்பு கூட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.செய்யித் லெப்பை உரையாற்றினார். நடப்பு பருவத்தின் கடைசி செயற்குழுக் கூட்டமான இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்ற அவர், ஒவ்வொரு கூட்டத்திற்கும் கூட்ட ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட வேண்டியதன் அவசியம் அனுபவத்தில் உணரப்பட்டுள்ளதாகக் கூறி, தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.
மன்றத்தின் புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக, ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில், உறுப்பினர்கள் - தமது குரல்களும் செயற்குழுவில் ஒலித்திட, தாமாகவே முன்வந்து வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
பின்னர், மன்றத்தின் ஒவ்வோர் உறுப்பினரது தன்னலமற்ற நகர்நலச் சேவைகளை கருணையுள்ள அல்லாஹ் அங்கீகரித்து, அவற்றுக்கான நற்கூலிகளை, அபிவிருத்தியாக வழங்கியருள வேண்டுமென பிரார்த்தித்து தனதுரையை நிறைவு செய்தார்.
மன்ற ஆலோசகர் உரை:
பின்னர், மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் உரையாற்றினார். வரும் தேர்தலுக்காக இதுவரை பெறப்பட்டுள்ள வேட்பு மனுக்கள், தேர்தல் நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவித்த அவர், தேர்ந்தெடுக்கப்படவுள்ள புதிய செயற்குழுவில் தலைமையில் மாற்றமிருக்கும் என்று தெரிவித்தார்.
புதிய செயற்குழுவில் பொறுப்புகளுக்காக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள உறுப்பினர்கள், மன்றத்தின் அனைத்துக் கூட்டங்களிலும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கிப் பேசிய அவர், மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இச்சூழலில், அதன் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புகளும் அவ்வப்போது வலிமைப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று கூறினார்.
பல்வேறு சிரமங்கள் - இன்னல்களுக்கிடையிலும், மன்றத்தின் அன்றாட நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு நகர்நலப் பணிகளாற்றிய நடப்பு செயற்குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ள செயற்குழு இன்னும் வலிமையுடனும், உத்வேகத்துடனும் செயல்பட்டு, மன்றத்தின் ஒவ்வொரு நடவடிக்கையின் மூலமும் பிறருக்குத் தூண்டுகோலாய் அமைந்திட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
பின்னர், மன்றத்தின் புதிய உறுப்பினராக ஹாஃபிழ் பி.ஏ.ஷாஹுல் ஹமீத் அறிமுகம் செய்யப்பட்டார். சிங்கையிலுள்ள Mobile Phone Application நிறுவனமொன்றில் நல்ல வேலைவாய்ப்பை அவர் பெற்றுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாய்ப்பைப் பெற்றிடுவதற்காக அவர் பல நேர்காணல்களில் கலந்துகொண்ட அனுபவத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, இத்துறையில் படித்த இளைஞர்களுக்கு - அவர்களின் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகள் சிங்கப்பூரில் பிரகாசமாக உள்ளதாகவும், அதிகளவில் அதற்குத் தேவையுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சிங்கை குடிமகனான - இளம் உறுப்பினர் முஹ்யித்தீன் ஸாஹிப், மஹ்மூத் மானாத்தம்பி ஆகிய புதிய உறுப்பினர்களும் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கும், தகுதிக்கேற்ற நல்ல வேலைவாய்ப்புகள் கிடைத்திட, அனைத்து உறுப்பினர்களும் தம்மாலான எல்லா ஒத்துழைப்புகளையும் வழங்கியுதவுமாறு கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
அடுத்து, மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத், மன்றத்தின் கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை வாசித்து, அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து விளக்கிப் பேசினார்.
மன்றத்திற்காக ஆயத்தம் செய்யப்பட்டுள்ள புதிய இலச்சினை குறித்து இன்னும் சிங்கப்பூர் அரசு பதிவாளரின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும், வரும் வருடாந்திர பொதுக்குழுவிற்கு முன்பாக ஒப்புதல் கிடைத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அனைத்து உறுப்பினர்களின் பார்வைக்காகவும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ள - மன்றத்தின் வருடாந்திர அறிக்கை குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அது தொடர்பாக, வரும் பொதுக்குழுவின்போது - தேவையான விளக்கங்கள் அளிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
‘ஷிஃபா’ குறித்த தகவல்கள்:
உலக காயல் நல மன்றங்களின் ஒருங்கிணைந்த மருத்துவ உதவித் திட்டத்திற்காக விவாதிக்கப்பட்டு வரும் ‘ஷிஃபா’ செயல்திட்டம் குறித்தும், அது தொடர்பாக இன்று வரை நடைபெற்றுள்ள கருத்துப் பரிமாற்றங்கள், அதற்காக சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட செயல்திட்ட முன்வடிவு ஆகியன குறித்து கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அத்தியாவசிய சமையல் பொருளுதவி:
காயல்பட்டினத்திலுள்ள, ஏழைக்குடும்பங்களுக்கு மன்றத்தால் வழங்கப்பட்டு வரும் அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு பருவத்திற்கான உதவிப் பொருட்கள், 2013 ஏப்ரல் 01ஆம் தேதியன்று 60 பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதுடன், இவ்வகைக்காக தொடர்ந்து ஆர்வத்துடன் உதவி வரும் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நல விரும்பிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பொதுக்குழு முன்னோடிப் போட்டிகள்:
நடைபெறவுள்ள வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு நடத்தப்பட வேண்டிய அனைத்து போட்டிகளும் இறையருளால் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதுடன், கைப்பந்து விளையாட்டுக்கு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல், கால்பந்து விளையாட்டுக்கு உறுப்பினர் எம்.ஜெ.செய்யித் அப்துல் ரஹ்மான், திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் போட்டிக்கு மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் ஆகியோர் வெற்றிகரமாக செய்த ஒருங்கிணைப்புப் பணிகளுக்காக அவர்களுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
திருக்குர்ஆன் மனனப் போட்டியின் விளைவு:
அடுத்து பேசிய மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.ஆர்.ஏ.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ, நடத்தி முடிக்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் போட்டி மற்றும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மன்றத்தால் நடத்தப்பட்டு வரும் குர்ஆன் மனன மீளாய்வு வகுப்புகள், திருக்குர்ஆனை மனனம் செய்துள்ள - மன்றத்தின் ஹாஃபிழ் உறுப்பினர்கள் தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள மிகவும் பயனளித்து வருவதாகவும், தாயகமாம் காயல்பட்டினத்திலிருந்து, தொலைதொடர்பு மூலம் மார்க்க அறிஞர்களைக் கொண்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ள ஹிஃப்ழு போட்டி மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதாகவும் கூறியதுடன், நல்ல விளைவுகளைத் தரும் இந்நிகழ்ச்சிகளை, வாய்ப்பிருப்பின் - அனைத்துலக காயல் நல மன்றங்களும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி - அவரவர் பகுதிகளிலுள்ள ஹாஃபிழ் உறுப்பினர்களுக்கு உதவிட முன்வருமாறும் கேட்டுக்கொண்டார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மன்றத்தின் மூத்த உறுப்பினர் எம்.அஹ்மத் ஃபுஆத், வாராந்திர குர்ஆன் வகுப்பில் ஹாஃபிழ் உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்று கூறினார்.
ஹிஃப்ழு போட்டி நடத்தப்படும் விபரம் குறித்து முற்கூட்டியே அறிவித்திருந்தால், ஏராளமானோர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டிருப்பர் என்று மன்ற துணைச் செயலாளர் எஸ்.டி.ஸூஃபீ ஹுஸைன் கூறினார்.
மாரத்தான் - குறு நீள்ஓட்டப் போட்டி:
அடுத்து, மார்ச் 29, 2013 அன்று மாலை 05.00 மணிக்கு, Bedok Reservoir பகுதியில், 2.2 கிலோ மீட்டர் சுற்றளவில் நடத்தப்படும் மினி மாரத்தான் – குறு நீள்ஓட்டப்போட்டியை ஒருங்கிணைக்கும் பொறுப்பு, மன்றத்தின் மூத்த உறுப்பினர் சாளை நவாஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது.
விண்ணப்பங்கள் பரிந்துரை:
அடுத்து, பல்வேறு உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்படும் விண்ணப்பங்களை மன்ற உறுப்பினர்கள் பரிந்துரைப்பதாக இருப்பின், அதற்கு முன்பாக மிகுந்த எச்சரிக்கையுடன் ஆய்ந்தறிந்த பின்னர் பரிந்துரைக்க வேண்டியதன் அவசியம் குறித்து கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பயனாளிகள் பட்டியல் இக்ராஃவுடன் பகிர்வு:
நலத்திட்ட உதவிகளுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பயனாளிகளின் பட்டியல், உள்ளூர் பிரதிநிதி மூலம் இக்ராஃ கல்விச் சங்கத்துடன் பகிர்ந்துகொள்ளப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வரவு-செலவு கணக்கறிக்கை:
அடுத்து, இதுநாள் வரையிலான மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை தாக்கல் செய்ய, கூட்டம் அதற்கு ஒப்புதலளித்தது. 2013ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்காக திட்டமிடப்பட்ட நிதியறிக்கையையும் தாண்டி நிதி பெறப்பட்டுள்ளதாகவும், இதை சாத்தியமாக்கிய மன்றத்தின் அனைத்துறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
கணக்கர் நியமனம்:
மன்ற ஆலோசகரும், மன்றத் தலைவரும் தெரிவித்துள்ள படி, மன்றத்தின் இனி வருங்கால வரவு-செலவு கணக்குகளைப் பராமரிக்க - உறுப்பினர் நஹ்வீ ஏ.எம்.ஷெய்கு அலீ ராஸிக் மன்றத்தின் அதிகாரப்பூர்வ கணக்கராக நியமிக்கப்பட்டார்.
நன்கொடையாளருக்கு நன்றி:
மன்றத்திற்குத் தேவையான அசைபட உருப்பெருக்கி (வீடியோ ப்ரொஜெக்டர்), மடிக்கணனி (லேப்டாப்) ஆகியவற்றை அன்பளிப்புச் செய்த - மன்றத்தின் நலன் விரும்பும் நன்கொடையாளருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
பொதுக்குழு ஏற்பாட்டுப் பணிகள்:
பின்னர், நடைபெறவுள்ள வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எம்.என்.ஜவஹர் இஸ்மாஈல், பொதுக்குழுக் கூட்டத்திற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள - இனி மேற்கொள்ளப்படவுள்ள ஆயத்தப் பணிகள் குறித்து விளக்கியதுடன், அவரவருக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்புகளை, வரையறுக்கப்பட்டுள்ள கால அளவிற்குள் செய்து முடிக்குமாறு பொறுப்பாளர்களைக் கேட்டுக்கொள்வதாகக் கூறினார்.
இராத்தங்கி இன்புற வேண்டுகோள்:
நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்ட நாளின்போது இரவு வரை தங்குவதன் மூலம், நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்துக்கொள்ளும் உறுப்பினர்கள் தமக்குள் அரட்டை, விளையாட்டு என இன்பத்துடன் களித்துக் கழித்திட, இப்போதே திட்டமிட்டுக்கொள்ளுமாறு மன்ற ஆலோசகர் கேட்டுக்கொண்டார்.
பொதுக்குழுக் கூட்ட நிகழ்முறை ஆய்வு:
பின்னர், நடைபெறவுள்ள வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்திற்கான நிகழ்முறை மற்றும் கூட்டப் பொருட்கள் (Schedule & Agenda) குறித்து கூட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்டது. அனைத்து உறுப்பினர்களின் ஆர்வத்துடன் கூடிய ஒத்துழைப்புடன் கூட்டம் இறையருளால் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிறப்பழைப்பாளருக்கு வரவேற்பு:
அடுத்து, சிங்கப்பூர் வந்துள்ள - ஜித்தா காயல் நல மன்ற உறுப்பினர் கே.எம்.என்.உமர் அப்துல் காதிருக்கு கூட்டத்தில் வரவேற்பளிக்கப்பட்டதுடன், வரும் பொதுக்குழுக் கூட்டத்திலும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
பின்னர் பேசிய அவர், ஒருநாள் ஊதிய நன்கொடை திட்டம், அத்தியாவசிய சமையல் பொருளுதவித் திட்டம், உண்டியல் நன்கொடை திட்டம் உள்ளிட்ட - சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பல முன்னோடித் திட்டங்கள் தன்னை பெரிதும் கவர்ந்துள்ளதாகக் கூறினார்.
மன்றப் பணிகள் குறித்து பின்னூட்டம் பெறல்:
மன்றத்தின் நகர்நலப் பணிகளை இன்னும் மெருகேற்றிடும் நோக்குடன், அதுகுறித்த மதிப்பீடு மற்றும் பின்னூட்டம் (appraisal & feedback) பெறுவதற்காக, மன்றத்தின் மூத்த உறுப்பினரும் - ஆலோசகருமான முனைவர் எம்.என்.முஹம்மத் லெப்பை அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி, படிவம் ஒன்று ஆயத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின்போது அனைத்து உறுப்பினர்களுக்கும் அப்படிவம் வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்கள் பெறப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வேலைவாய்ப்பு தகவல் திரட்டு:
சிங்கப்பூரில் புதிதாக வேலைவாய்ப்பு தேடும் காயலர்களின் வசதிக்காக கூடுதல் கவனம் எடுக்கப்பட வேண்டும் என்றும், தம் வருங்காலத்தை ஒளிமயமாக்கிட விரும்பும் காயலர்கள் வசதிக்காக, வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் எப்போதும் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும் என்றும் மன்றத்தின் துணைக்குழு உறுப்பினர் அபூபக்கர் ஸித்தீக் கருத்து தெரிவித்தார்.
அதனடிப்படையில், மன்ற உறுப்பினர்களின் நடப்பு அலுவலகப் பணிகள் குறித்த விபரங்களை சேகரித்து தரவுதளம் (database) ஆயத்தம் செய்திட,, துணைக்குழு உறுப்பினர் அபூபக்கர் ஸித்தீக், உறுப்பினர் காதிர் ஸாஹிப் அஸ்ஹர் ஆகியோர் வசம் பொறுப்பளிக்கப்பட்டது.
நலத்திட்ட உதவிக்கான விண்ணப்பப் படிவம்:
மன்றத்திலிருந்து நலத்திட்ட உதவிகள் பெற்றிடுவதற்காக, அனைத்து தகவல்களையும் கேட்டறியும் வகையில் விண்ணப்பப் படிவம் ஒன்றை ஆயத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியமென்று கருதி, மன்ற உறுப்பினர்களான எம்.எல்.எஸ்.மொகுதூம் முஹம்மத், ஹபீப் முஹம்மத் ஆகியோரிடம் விண்ணப்பப் படிவம் தயாரிக்கும் பொறுப்பளிக்கப்பட்டது.
மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் காலாண்டறிக்கை:
அடுத்து, மன்ற உறுப்பினர்கள் தமது உடல் நலன் குறித்து விழிப்புணர்வோடிருக்கும் பொருட்டு, மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்பட வேண்டுமென்றும், மன்றத்தின் நகர்நலப் பணிகள் குறித்து ஒவ்வொரு காலாண்டிலும் செய்தியறிக்கை வெளியிட வேண்டும், உறுப்பினர் எம்.என்.ஜவஹர் இஸ்மாஈல் முன்வைத்த ஆலோசனையை செயற்குழு வரவேற்றது. வரும் மாதங்களில் இறையருளால் அவை நடைமுறைப்படுத்தப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த கூட்ட ஒருங்கிணைப்பாளர்:
வரும் மே மாதத்திற்கான செயற்குழுக் கூட்ட ஒருங்கிணைப்பாளராக, உறுப்பினர் ஜெ.அபுல் காஸிம் நியமிக்கப்பட்டார்.
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், உறுப்பினர் எம்.ஜெ.செய்யித் அப்துல் ரஹ்மானின் துஆ - பிரார்த்தனையுடன், நண்பகல் 12.45 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது.
மதிய உணவு விருந்துபசரிப்பு:
இக்கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு - துணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் மதிய உணவாக மீன் பிரியாணி விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |