கடந்த சில நாட்களாக, தங்கள் பகுதியில் மட்டும் செய்யப்பட்ட மின்தடையை உடனடியாக சரிசெய்யக் கோரி, காயல்பட்டினம் 14ஆவது வார்டு இரத்தினபுரி மற்றும் 15ஆவது வார்டு சீதக்காதி நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான பெண்கள் அடங்கிய பொதுமக்கள், நேற்றிரவு 08.30 மணியளவில், காயல்பட்டினம் இரத்தினபுரியில், ஆறுமுகநேரி - காயல்பட்டினம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தவற்காக திடீரென திரண்டனர்.
இரத்தினபுரி, சீதக்காதி நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த - சுமார் 250 பெண்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோர், கைகளில் மெழுவர்த்தி ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்நேரத்தில் திருச்செந்தூரிலிருந்து வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து, தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூரை நோக்கி சென்றுகொண்டிருந்த சுமார் 3 அரசுப் பேருந்துகளை அவர்கள் சிறைப்பிடித்தனர்.
தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் டி.எஸ்.பி. ஞானசேகரன், திருச்செந்தூர் கோயில் பகுதி காவல்துறை ஆய்வாளர் ப்ரதாபன், ஆறுமுகநேரி காவல்துறை துணை ஆய்வாளர்களான சண்முகவேல், ராஜகுமாரி, ஆத்தூர் காவல்துறை துணை ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்ட காவல்துறையினர் நிகழ்விடம் வந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் நீண்ட நேரம் சமாதானம் பேசினர். எனினும், மின் வினியோகம் செய்யப்படும் வரை சாலை மறியலைக் கைவிடப் போவதில்லை என அவர்கள் திட்டவட்டமாகக் கூறினர்.
இந்நிலையில், தமிழ்நாடு மின்வாரியத்தின் திருச்செந்தூர் கோட்ட செயற்பொறியாளர் தாமோதரன் நிகழ்விடம் விரைந்தார். மக்களுக்குப் பணி செய்வதற்காகவே தாங்கள் இருப்பதாகவும், அப்பகுதி மின் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள பழுது விரைவில் சரிசெய்யப்படும் என்றும், அதுவரை ஒத்துழைக்குமாறும் கூறி, பழுதை சரிசெய்ய பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். அதனையடுத்து, பழுது சரிசெய்யப்பட்டு, இரவு 11.10 மணியளவில் அப்பகுதிக்கு மின் வினியோகம் செய்யப்பட்ட பின்னர், பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இச்சாலை மறியல் காரணமாக, காயல்பட்டினம் - ஆறுமுகநேரி நெடுஞ்சாலையில் சுமார் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கள உதவி:
சாளை முஹம்மத் முஹ்யித்தீன் |