தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொழிற்சாலையை முற்றுகையிட முயன்ற வைகோ, நல்லக்கண்ணு உட்பட பெருந்திரளானோர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கடந்த 23ஆம் தேதி அதிகாலையில் விஷவாயு வெளியேறி காற்றில் கலந்ததால், கண் எரிச்சல், நெஞ்செரிச்சல், சுவாசக் கோளாறுகள், மூச்சுத்திணறல் ஏற்பட்டு நோயாளிகள், குழந்தைகள், சிறுவர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடியில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை, மக்களின் நலன் கருதி உடனடியாக மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலளார் வைகோ தலைமையில் கடந்த 25ஆம் தேதி ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் பேராட்டம் நடந்தது. அப்போது, 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அவர் அறிவித்தார்.
அதன்படி இந்த முற்றுகை போராட்டம் தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பு இருந்து துவங்கியது. இதில், ஸ்டெர்லைட ஆலையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சாலையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மதிமுக பொதுச் செயலளார் வைகோ, இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு, வணிகர் சங்க தலைவர் வெள்ளையன், மதிமுக எம்பி கணேச மூர்த்தி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேரடி ஒளிபரப்பை காவல்துறையினர் தடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இத்தகவலையறிந்த செய்தியாளர்கள் காவல்துறைக்கெதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். சிறிது நேரத்தில் இப்பிரச்சினை முடிவுக்கு வந்தது.
பின்னர், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் தலைமையில் வணிகர்களும், பொதுமக்களும், வீராங்கணை அமைப்பு பாத்திமா பாபு தலைமையில் ஏராளமான பெண்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியினரும், வைகோ தலைமையில் மதிமுகவினரும் அணி அணியாக ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடுவதற்காக மத்திய வியாபாரிகள் சங்கம் சார்பில் நடராஜன், ஈஸ்வரன், சவுந்திரபாண்டியன், ஜான்சன், கல்யாணசுந்தரம், டி.ஏ.தெய்வநாயகம், அபிராமி சந்திரசேகர், மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல், நகர செயலாளர் மாடசாமி, நக்கீரன், முருகபூபதி, தர்மம், சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன்ராஜ்,
மதசார்பற்ற ஜனதாதளம் மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் சொக்கலிங்கம், மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜேந்திர பூபதி, மீனவர் ஐக்கிய முன்னணி நிர்வாகி ஜாய் காஸ்ட்ரோ, ஜான்பி ராயன், விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் சேவியர் வாஸ், மெரின்டோ வி.ராயர், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம், வழக்கறிஞர்கள் அதிசயகுமார், கார்த்திக்கேயன் உட்பட 71 அமைப்புகளைச் சேர்ந்த பெருந்திரளானோர் புறப்பட்டுச் சென்றனர்.
பாளை ரோட்டில் உள்ள இசக்கியம்மன் கோவில் அருகே சென்றபோது, போலீஸ் ஏஎஸ்பி மகேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்து தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
ஆர்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டம் நடைபெற்றதையொட்டி, அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. பெரும்பாலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இப்போராட்டத்தில், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பில், அதன் துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், எழுத்தாளர் சாளை பஷீர் ஆரிஃப் ஆகியோரும், மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத், ஜெ.ஏ.லரீஃப் உள்ளிட்டோரும் காயல்பட்டினத்திலிருந்து தூத்துக்குடி சென்று கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், செய்தியாளர்களிடம் வைகோ அளித்த பேட்டியின் அசைபடப் பதிவைக் காண இங்கே சொடுக்குக!
படங்களில் உதவி:
முருகன் |