மருத்துவத் துறையில் உலக காயல் நல மன்றங்களை ஒருங்கிணைப்பதற்காக விவாதிக்கப்பட்டு வரும் ‘ஷிஃபா’ செயல்திட்டம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதுடன், நிர்வாக வசதி கருதி சில சீரமைப்புகளும் மலபார் காயல் நல மன்றம் (மக்வா) அமைப்பின் 53ஆவது செயற்குழுவில் செய்யப்பட்டுள்ளது..
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் செய்யித் ஐதுரூஸ் (சீனா) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இறையருளால் எமது மலபார் காயல் நல மன்றம் - மக்வா அமைப்பின் 53ஆவது செயற்குழுக் கூட்டம், மன்றத் தலைவர் மஸ்ஊத் தலைமையில் நடைபெற்றது.
மன்றச் செயலாளர் உஸ்மான் லிம்ரா வரவேற்புரையாற்றினார். ஒருங்கிணைந்த மருத்துவ உதவித் திட்டம் ‘ஷிஃபா’ குறித்தும், அதனை நடைமுறைப்படுத்தும் நோக்குடன் காயல் நல மன்றங்களின் பிரதிநிதிகளால் நடத்தப்பட்ட ஸ்கைப் கலந்துரையாடல் பற்றியும் அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார். ஸ்கைப் கலந்துரையாடலின் ஒலிப்பதிவை அனைவரையும் கேட்கச் செய்தார்.
பின்னர், மன்ற செயற்குழுவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள உறுப்பினர்களுக்கு அவர் அறிவுரைகளை வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து, மக்வா தலைவர் மஸ்ஊத் தலைமையுரையாற்றினார். ஷிஃபா செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், அனைவருக்கும் அறிவுரை கூறும் வகையிலும் அவர் தனதுரையை அமைத்துக்கொண்டார்.
பின்னர், உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 – ‘ஷிஃபா’வில் இணைவு:
நம் நகரில் புதிதாகத் துவக்கப்படவிருக்கும் - ஒருங்கிணைந்த மருத்துவ உதவித் திட்டம் ‘ஷிஃபா’வின் தற்காலிகக் குழுவில் அங்கம் வகிக்கவும், இனி நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களில், மன்றச் செயலாளர் உஸ்மான் லிம்ரா அவர்களைப் பிரதிநிதியாகக் கொண்டு கலந்துகொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 – நலத்திட்ட உதவி:
காயல்பட்டினத்திலிருந்து மருத்துவ உதவி கோரி பெறப்பட்ட விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, அவ்வகைக்காக, ரூபாய் 15000 நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
தீர்மானம் 3 – செய்தி தொடர்பாளர் நியமனம்:
மக்வாவின் செய்தி தொடர்பாளராக மீண்டும் செய்யித் ஐதுரூஸ் (சீனா) நியமிக்கப்பட்டார்.
தீர்மானம் 4 – செயற்குழுவில் கூடுதலாக ஓர் உறுப்பினர்:
மன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையைக் கணக்கிற்கொண்டு, அதனடிப்படையில் - மன்ற செயற்குழுவில் ஒருவரை கூடுதலாக இடம்பெறச் செய்ய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, அண்மையில் நடைபெற்று முடிந்த மன்றத்தின் செயற்குழு தேர்தலில் போட்டியிட்டு - வெற்றிக்கு முனைந்தோரில் அதிகளவில் வாக்குகளைப் பெற்ற தலச்சேரி நிஜாம் அவர்களை செயற்குழுவில் கூடுதல் உறுப்பினராக இணைத்திட தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 5 – கவுரவ ஆலோசகர்கள்:
மன்றத்தின் கவுரவ ஆலோசகர்களாக முன்னாள் செயலாளர் ஐதுரூஸ் (ஆதில்) மற்றும் ‘அமீன் டூல்ஸ்’ சாளை ஷாஹுல் ஹமீத், காழி அலாவுத்தீன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காலை 10.30 மணிக்குத் துவங்கிய கூட்டம், மதியம் 01.45 மணியளவில் அனைவரின் துஆவுடன் நிறைவுற்றது.
இவ்வாறு, மக்வா அமைப்பின் செய்தி தொடர்பாளர் செய்யித் ஐதுரூஸ் (சீனா) தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |