இளைஞர்களின் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, தமிழக அரசு - இளைஞர்கள் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் (UYEGP), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) ஆகிய இரு திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தி வருகிறது.
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2012-13ஆம் நிதியாண்டில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 21 நபர்களுக்கு மானியமாக ரூ.262.50 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8 நபர்கள் கடன் அனுமதி ஆணை பெற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.
இளைஞர்கள் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2012-13ஆம் நிதியாண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இலக்கான 150 நபர்களைத் தாண்டி, 177 நபர்களுக்கு கடன் ஒப்பளிப்பு அனுமதிக்கப்பட்டு, 103 நபர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி காயல்பட்டினம் கிளை மூலம் ரூபாய் மூன்று லட்சம் மதிப்பிலான ஆம்னி வேன் ரூபாய் 45,000 மானியத்தில், காயல்பட்டினம் சிவன்கோவில் தெருவைச் சேர்ந்த ஃபைஸல் ரஹ்மான் என்ற பயனாளியிடம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஞா.ஞானசேகர் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார், வாகனத்தின் சாவியை வழங்கினார்.
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்ட நேர்முகத் தேர்வு, மாவட்ட ஆட்சியர் தலைமையில், 25.03.2013 திங்கட்கிழமையன்று நடைபெற்றது. இத்தேர்வில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை மேலாளர், சிறு - குறு தொழிற்சங்க உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற NEEDS நேர்முகத் தேர்வில் 9 பயனாளிகள் கடன் பெற தேர்வுபெற்றுள்ளனர். |