உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில், இவ்வாண்டு எஸ்.எஸ்.எல்.சி. அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ-மாணவியருக்காக, இம்மாதம் 26ஆம் தேதி முதல் வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி வரை கல்வி ஒளிபரப்பு நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து, இக்ராஃ கல்விச் சங்கத்தின் நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இவ்வாண்டு பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ-மாணவியரின் கல்வித் திறனைப் பெருக்கிடும் பொருட்டும், அரசுத் தேர்வில் மாணவ-மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்றிட வேண்டும் என்ற நோக்கோடும், வழமை போல இவ்வாண்டும் - இம்மாதம் 26ஆம் தேதி முதல் வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி வரை, காயல்பட்டினம் நகரின் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகளான IIM TV மற்றும் முஹ்யித்தீன் டிவி ஆகியவற்றில், பின்வருமாறு கல்வி ஒளிபரப்பு நடத்தப்படவுள்ளது:-
பல்வேறு கல்வி நிறுவனங்களின் திறமை மிக்க ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படும் இக்கல்வி ஒளிபரப்பை, இவ்வாண்டு பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ-மாணவியர், குறித்த காலத்தில் அவசியம் பார்த்துப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.
இந்த ஒளிபரப்பு குறித்த நிகழ்ச்சிகால அட்டவணை பிரசுரம் நகரின் அனைத்து கல்வி நிறுவனங்களின் மூலமும் பத்தாம் வகுப்பு மாணவ-மாணவியருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. எனினும் இச்செய்தியைப் படிக்கும் யாராயினும், உங்களுக்கு அறிமுகமான பத்தாம் வகுப்பு மாணவ-மாணவியருக்கு இதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, அவர்களைப் பயன்பெறச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ் நமதூர் மக்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தி, சிறந்த சாதனைகள் பல புரிவதற்கும், கற்ற கல்வியைக் கொண்டு மாணவ-மாணவியர் - அவர்கள்தம் குடும்பத்தார், உற்றார் - உறவினருக்கும், ஊருக்கும், நாட்டுக்கும் நற்பயனளிக்கவும் அருள் புரிவானாக ஆமீன்.
இவ்வாறு, இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
N.S.E.மஹ்மூது,
மக்கள் தொடர்பாளர்,
இக்ராஃ கல்விச் சங்கம்,
காயல்பட்டினம். |