காயல்பட்டினத்தில், புதிய சாலை அமைப்பதற்காக தோண்டப்பட்டுள்ள ஆஸாத் தெருவில் விரைவாக புதிய சாலை அமைக்காவிடில் நகர பொதுமக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக காயல்பட்டினம் நகராட்சியை - நகர முஸ்லிம் லீக் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இம்மாதம் 24ஆம் தேதியன்று நடைபெற்ற - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அவசர பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட படி, காயல்பட்டினம் ஆஸாத் தெருவில் புதிய சாலையை விரைவாக அமைத்திடுமாறு, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமாரை, நகர முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர் தலைமையிலான குழுவினர், 25.03.2013 திங்கட்கிழமை மதியம் 02.00 மணியளவில் சந்தித்து கோரிக்கை கடிதம் அளித்தனர்.
புதிய சாலை அமைக்கப்படாமல், சாலை தோண்டப்பட்ட நிலையிலேயே பல மாதங்களாக இருப்பதால், ஆஸாத் தெரு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், விரைவாக புதிய சாலை அமைக்காவிட்டால், நகர பொதுமக்களைத் திரட்டி, நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.கே.மஹ்மூத் சுலைமான் உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர். காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீனும் உடனிருந்தார்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் (காயல்பட்டணம்.காம்) |