ஸ்டெர்லைட், டி.சி.டபிள்யு. உள்ளிட்ட எந்த ஆலையானாலும், மக்களை பாதிக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர் வாராந்திர கூட்டம் 25.03.2013 திங்கட்கிழமையன்று நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தெரிவித்துள்ளதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியான வாயு சம்பந்தமாக மக்கள் கண் எரிச்சல், தொண்டை அடைப்பு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டனர்.
இது சம்பந்தமாக ஆர்.டி.ஓ தலைமையில் விசாரணை செய்து ஸ்டெர்லைட்டில் உள்ள சல்பியூரிக் ஆசிட் பிளாண்டை ஏன் மூடக்கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது தவிர சுற்றுச்சூழல் மற்றும் மாசுகட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் நேற்று ஸ்டெர்லைட் ஆலையில் வந்து ஆய்வு செய்துள்ளார். அவர் அரசுக்கு அங்கு நடந்துள்ள விபரத்தை அறிக்கை அளிப்பார். அதில் மாவட்ட நிர்வாகத்திற்கும் ஒரு நகல் வரும்.
மக்களுக்காகத்தான் மாவட்ட நிர்வாகம் உள்ளது. மக்களை பாதிக்க செய்தவுடன் ஸ்டெர்லைட் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வைகோ அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர். அவருக்கு மக்கள் பிரச்னைக்காக போராட உரிமை உள்ளது. அதே சமயம் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலெக்டர் மீது தவறான புகாரை தெரிவித்துள்ளார். வைகோ கலெக்டர் மீது தெரிவித்திருக்கும் புகார் அனைத்தும் தவறானதும், ஆதாரமற்றதுமாகும். அரசியல்வாதிகள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். வைகோவுடன் இருக்கக்கூடிய ஒருவர் தவறான தகவலை போஸ்டராக வெளியிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு மாதம் அவர் ஊருக்குள் வராமல் தலை மறைவாக இருந்தார்.
மாவட்ட நிர்வாகத்தை பொறுத்தமட்டில் இதில் நல்ல முறையில் நடவடிக்கை எடுத்துள்ளது. ஸ்டெர்லைட் தவிர டி.சி.டபுள்யூ உள்ளிட்ட எந்த தொழிற்சாலைகளாலும் மக்களை பாதிக்கும் வகையில் செயல்பட்டால் அந்த ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் ஒரு மாதத்திற்குள் ஆய்வு செய்ய ஏழு பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படுகிறது. அந்த கமிட்டியினர் தொழிற்சாலைகள் அனைத்தும் அரசு விதிமுறைகளின் படி நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு கழிவுகளை வெளியேற்றுகிறதா, அதனை விட அதிகமாக வெளியேற்றுகிறதா உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்வர். அதிகமாக வெளியேற்றினால் அதனை சரி செய்யச் சொல்லி முதலில் தெரிவிப்போம். சரி செய்யவில்லை என்றால் ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
சில தொழிற்சாலைகளில் கழிவுகள் எல்லாம் முறையாக வெளியேற்றுவார்கள். அதே சமயம் அந்த ஆலையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று புகார் வந்தால் அது குறித்து விசாரிக்கப்படும். மக்களுக்கு பாதிப்பு என்று தெரிந்தால் அந்த தொழிற்சாலையை உடனடியாக மூடுவதற்கு வேண்டிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்கும்.
நாங்கள் எங்கள் பணியினை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம். வைகோ அவர் வேலையை செய்யட்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட நோட்டீசுக்கு அவர்கள் சரியான பதிலை அளிக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக கடும் நடவடிக்கையை அந்த ஆலை மீது எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் தயங்காது.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
டி.எஸ்.ஓ காமாட்சி கணேசன், பி.ஆர்.ஓ தமிழ் இனியன், கலெக்டர் அலுவலக மேலாளர் நயினார்பிள்ளை, ஏ.பி.ஆர்.ஓ குமார், துணை ஆட்சியர்கள் நம்மையாழ்வார், கமலா, டி.எஸ்.ஓ நேர்முக உதவியாளர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
நன்றி:
தினமலர் |