விஷவாயு கசிவு:
தூத்துக்குடி மாநகர் பகுதியில் 23.03.2013 சனிக்கிழமையன்று (நேற்று) அதிகாலை 05.00 மணி முதல் 07.00 மணி வரை கடுமையான நச்சுக்காற்று வீசியது. இதனால் அப்பகுதியில் வசித்த ஆயிரக்கணக்கானோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஏராளமானோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். பொதுமக்கள் மட்டுமின்றி, மரம், செடி, கொடிகளிலுள்ள ஒரு பகுதி இலைகளும் இந்த வாயுக்கசிவால் கருகிய நிலையில் காணப்பட்டன.
மருத்துவக் குழுவினர் முகாம்:
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், அங்குள்ள பல மருத்துவமனைகளில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலை காரணம்:
இந்நிகழ்வு, தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி பகுதியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு தொழிற்சாலையே இதற்குக் காரணமாக இருக்கக் கூடும் என்று கருதிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர், ஆலையை மூட அரசை வலியுறுத்தி தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணிக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் அறிக்கை:
அதன் தொடர்ச்சியாக, ஸ்டெர்லைட் ஆலையின் இந்த வாயுக்கசிவு குறித்து மாவட்ட நிர்வாகம் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென, மதிமுக கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜோயல் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் 23.03.2013 சனிக்கிழமையன்று அதிகாலையில் விஷவாயு வெளியேறி காற்றில் கலந்ததால், கண் எரிச்சல், நெஞ்செரிச்சல், சுவாசக் கோளாறுகள், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அதிகாலை 02.00 மணியளவில் அந்த தொழிற்சாலையில் இருந்து சல்பியூரிக் ஆக்ஸைடு பிளாண்ட் பகுதியில் விஷவாயு சிறிதளவு வெளியேறியுள்ளது. அது காற்றில் கலந்ததால் தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதுபோன்று அதிகாலை 06.00 மணியளவில் தொழிற்சாலையிலிருந்து பெருமளவு விஷவாயு வெளியேறியுள்ளது. இதனால் நகர் முழுவதும் - நோயாளிகள், குழந்தைகள், சிறுவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர் போய்விடுமோ என்ற அச்ச உணர்விற்கும் மக்கள் ஆளாகினர்.
எனவே இதுகுறித்து தொலைபேசி மூலம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கும், மாசுகட்டுப்பாட்டு நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்தினரும், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
தூத்துக்குடியில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை, மக்களின் நலன் கருதி உடனடியாக மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து உண்மை நிலையை வெள்ளையறிக்கையாக வெளியிட வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி பெரியளவில் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு, மதிமுக மாவட்டச் செயலாளர் ஜோயல் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆலை நிர்வாகம் மறுப்பு:
இது ஒருபுறமிருக்க, ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து விஷவாயு எதுவும் வெளியேறவில்லை என ஆலை நிர்வாகத்தின் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மாவட்ட ஆட்சியர் தகவல்:
ஆனால், இந்த விஷவாயுக் கசிவுக்கு ஸ்டெர்லைட் ஆலைதான் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ள அளவுக்கு மேல் கந்தக டை ஆக்ஸைட் வெளியேறியதால் சில குறிப்பிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது இந்த ஆலை மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தமிழக முதல்வருடன் கலந்தாலோசித்த பின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளதால் ஆலை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் |