தூத்துக்குடி நகரில், 23.03.2013 சனிக்கிழமையன்று அதிகாலையில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையிலிருந்து 23.03.2013 சனிக்கிழமையன்று வெளியான விஷவாயுக் கசிவால் பொதுமக்கள் பலர் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆய்வறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், பொதுமக்கள் பீதியடையவோ, வதந்திகளை நம்பவோ தேவையில்லை என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தூத்துக்குடியில் சில பகுதிகளில் 23.03.2013 அன்று காலையில் திடீரென பொதுமக்களுக்கு கண் எரிச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதாகவும், ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து திறந்துவிடப்பட்ட புகையினால் இந்த சிறு பாதிப்பு ஏற்பட்டதாகவும் பொதுமக்களிடமிருந்து புகார் வரப்பெற்றது.
அதனடிப்படையில், இதுகுறித்து விசாரணை செய்து அறிக்கையளித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.
தூத்துக்குடி கோட்டாட்சியர் தலைமையில், மாசு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் தூத்துக்குடி வட்டாட்சியர் ஆகியோர் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். மாசு கட்டுப்பாட்டு அலுவலரின் ஆய்வறிக்கையில், தனியார் தொழிற்சாலையிலிருந்து புகை (கழிவு வாயு) அதிகளவு திறந்து விடப்பட்டதாகவும், அதில் வழக்கமான அனுமதிக்கப்பட்ட அளவிற்குள்ளாகவே கந்தக டை ஆக்ஸைடு வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நிகழ்வினால் பொதுமக்கள் யாரும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாகவோ, மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவோ இல்லை.
மாசு கட்டுப்பாட்டு அலுவலரின் ஆய்வறிக்கையின்படி, மேற்படி நிர்வாகத்தினர் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாகக் கருதி, அந்நிறுவனத்தின் மீது தூத்துக்குடி கோட்டாட்சியர் அவர்களால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133இன் கீழ் தொழிற்சாலையில் உள்ள கந்தக அமில ஆலை (Sulphuric Acid Plant)யை ஏன் மூடக்கூடாது என்று ஐந்து நாட்களுக்குள் (28.03.2013) விளக்கம் தெரிவித்திட அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்தினர் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையிலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து பெறப்படுகின்ற விரிவான அறிக்கையின் அடிப்படையிலும் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அனைத்து விசாரணை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதால், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், தவறான - வீண் வதந்திகளை நம்ப வேண்டாமென்றும் மாவட்ட நிர்வாகத்தினரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |