காயல்பட்டினத்தில் 22.03.2013 வெள்ளிக்கிழமை இரவு சொத்து தகராறில் தம்பி படுகொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக அவரது அண்ணன் கைது செய்யப்பட்டார்.
காயல்பட்டினம் வீர சடைச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரது மனைவி முத்து லட்சுமி. இவர்களுக்கு நான்கு மகன்களும் மற்றும் இரு மகள்களும் உள்ளனர். அனைவரும் தனிக்குடித்தனம் சென்று விட்டனர். சுவாமிநாதன் 23 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார்.
தற்போது முத்துலட்சுமியும், அவரது பேத்தி சந்தியாவும் வீட்டில் வசித்து வருகின்றனர். 4ஆவது மகன் சங்கர் (39) ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்னர் களக்காட்டில் திருமணமாகி, மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.
சுவாமிநாதனின் 2ஆவது மகன் மருதநாயகம் திருமணமாகி சுசீந்திரத்தில் லாரி டிரைவராக உள்ளார். இரு நாட்களுக்கு முன்னர் மருதநாயகம் தாய் முத்துலட்சுமி வீட்டிற்கு வந்தாராம். வெள்ளிக்கிழமை இரவு சங்கர் வீட்டிற்கு வந்து தாய் முத்துலட்சுமி தங்கியுள்ள வீடு தனக்கு வேண்டுமென மருதநாயகத்திடம் தகராறு செய்தாராம். பின்னர் அவர் வீட்டிற்கு முன் குவிக்கப்பட்டிருந்த ஆற்று மணலில் படுத்து தூங்கிவிட்டாராம்.
சுமார் 11.00 மணியளவில் வீட்டிலிருந்த அரிவாளுடன் வெளியில் வந்த மருதநாயகம் சங்கரை அரிவாளால் கழுத்தில் வெட்டினாராம். இதில் படுகாயமடைந்த சங்கர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாராம்.
திருச்செந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஞானசேகர், ஆறுமுகனேரி ஆய்வாளர் பார்த்திபன், உதவி ஆய்வாளர்கள் ராஜகுமாரி மற்றும் சண்முகவேல் ஆகியோர் நிகழ்விடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட சங்கரின் உடல் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது.
ஆறுமுகனேரி காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மருதநாயகத்தை (40) கைது செய்துள்ளனர். |