இம்மாதம் 20ஆம் தேதியன்று காயல்பட்டினத்தின் பெரும்பாலான பகுதிகளில் உணரப்பட்ட துர்வாடை வீச்சம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, KEPA செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
கடந்த 20.03.2013 புதன்கிழமையன்று இரவு 07.00 மணியளவில், காயல்பட்டினத்தில் ஒரு வகையான துர்வாடை பல மணி நேரமாக உணரப்பட்டது.
காயல்பட்டினம் தைக்கா தெரு, புதுக்கடைத் தெரு, மகுதூம் தெரு, குறுக்கத் தெரு, குத்துக்கல் தெரு, சதுக்கைத் தெரு, கே.டி.எம். தெரு, அலியார் தெரு, தீவுத்தெரு உட்பட பல பகுதிகளிலிருந்தும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் KEPA நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு, துர்வாடை வீச்சம் குறித்து தகவல் தெரிவித்தனர். KEPA நிர்வாகிகள் சிலரும் அதனை நேரடியாக உணர்ந்தனர்.
இதுகுறித்து, KEPA நிர்வாகக் குழு அவசரமாகக் கூடி விவாதித்தது. நிறைவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையிட முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில், 21.03.2013 வியாழக்கிழமையன்று (நேற்று) – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் - சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்திற்கும், தூத்துக்குடியிலுள்ள மாவட்ட அலுவலகத்திற்கும் தொலைநகல் மூலம் KEPA முறையிட்டது.
இந்த துர்வாடை குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அம்முறையீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |