காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) நகர்நலப் பணிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம், தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) சார்பில், KEPA நிர்வாகிகளிடம் நேரில் கையளிக்கப்பட்டது.
இதுகுறித்து, KEPA செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
காயல்பட்டினத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) என்ற பெயரில் அமைப்பு துவக்கப்பட்டு, நகர பொதுமக்களை ஒருங்கிணைத்து - DCW ஆலையின் சுற்றுச்சூழல் மாசுக்கெதிரான தொடர் நடவடிக்கைகள், நகரைப் பசுமை நிறைந்ததாக உருவாக்கிட செயல்திட்டம் என பல முயற்சிகள் தொடராக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
KEPAவின் இப்பணிகளுக்கு ஆதரவளிப்பதாகவும், தேவையான ஒத்துழைப்புகளைச் செய்திட ஆயத்தமாக உள்ளதாகவும், தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் சார்பில், 17.02.2013 அன்று நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானமியற்றப்பட்டுள்ளது.
அத்தீர்மானத்தை KEPA நிர்வாகத்திடம் முறைப்படி சமர்ப்பிப்பதற்காக, KEPA நிர்வாகக் குழு இன்று காலை 10.00 மணியளவில், அதன் அலுலவகத்தில் கூடியது.
இந்நிகழ்வில், தாய்லாந்து காயல் நல மன்றத்தின் சார்பில் அதன் செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத், KEPA குறித்த தமதமைப்பின் ஆதரவுத் தீர்மானம் குறித்து விளக்கிப் பேசினார்.
பின்னர், அவருடன் தக்வா அமைப்பின் அங்கத்தினரான எம்.எச்.முஹம்மத் ஸாலிஹ், ஆர்.காஜா நவாஸ் ஆகியோர் இணைந்து, KEPA தலைவரிடம் தீர்மான நகலைக் கையளித்தனர்.
அதனைப் பெற்றுக்கொண்ட, KEPA தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் - ஆதரவு தீர்மானம் நிறைவேற்றியமைக்காக தக்வா அமைப்பிற்கு KEPAவின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
நகர்நலன் காப்பதற்காக KEPAவால் மேற்கொள்ளப்பட்டு வரும் இம்முயற்சிகளுக்கு அனைத்துலக காயல் நல மன்றங்களும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளும் உறுதுணையளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும், அந்த அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்கி வரும் அனைத்து அமைப்புகளுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
பின்னர், KEPA அமைப்பிற்கு ஆதரவளிக்கும் - தக்வா அமைப்பின் தீர்மான வாசகத்தை, KEPA துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ கூட்டத்தில் வாசித்தார்.
KEPA செயற்குழு உறுப்பினர் ஹாஜி மக்கீ நூஹுத்தம்பி துஆ - பிரார்த்தனை இறைஞ்ச, ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், KEPA அமைப்பின் துணைத்தலைவர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், துணைச் செயலாளர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், செயற்குழு உறுப்பினர்களான ஏ.எஸ்.புகாரீ, எல்.எம்.இ.கைலானீ, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் (நகர்மன்ற உறுப்பினர்), செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |