கடந்த டிசம்பர் மாதம் காயல்பட்டினம் வருகை தந்த DCW ஆலை ஆய்வுக்குழுவால் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்து காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மூலம் நகரில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் தொடர் மாசு குறித்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA தொடராக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
KEPA முறையீடு:
அதன் ஒரு கட்டமாக, கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதியன்று, சென்னை கிண்டியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் - KEPA ஒருங்கிணைப்பில், சென்னைவாழ் காயலர்கள் சுமார் 300 பேர் திரண்டு சென்று, மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவரை நேரடியாக சந்தித்து, காயல்பட்டினத்தில் மாசு ஏற்படுத்தி வரும் DCW தொழிற்சாலை குறித்து, சுதந்திரமான வல்லுநர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்யுமாறு முறையிட்டனர்.
ஆய்வுக்குழு வருகை:
அதன் தொடர்ச்சியாக, 22.12.2012 சனிக்கிழமையன்று, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சென்னை தலைமை அலுவலகத்திலிருந்தும், தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்திலிருந்தும் அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக்குழு காயல்பட்டினம் வருகை தந்து, தொழிற்சாலையின் கழிவுநீர் ஓடை உள்ளிட்ட பல பகுதிகளையும் ஆய்வு செய்து, சோதனைக்காக பொருட்களையும் சேகரித்துச் சென்றனர்.
அறிக்கை சமர்ப்பிப்பு:
தற்போது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு அக்குழு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் KEPA அந்த அறிக்கையின் நகல்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
செயற்குழுக் கூட்டம்:
அறிக்கை குறித்து விவாதிப்பதற்காக, KEPAவின் செயற்குழுக் கூட்டம் 19.03.2013 செவ்வாய்க்கிழமை இரவு 08.00 மணியளவில், KEPA அலுவலகத்தில் - அதன் தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா தலைமையில் கூடியது.
அமைப்பின் துணைத்தலைவர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு ஆய்வுக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை குறித்து, KEPA துணைச் செயலாளர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் இக்கூட்டத்தில் விளக்கிப் பேசினார். நிறைவில், அது தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு, முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
DCW ஆலையின் சுற்றுச்சூழல் மாசுக்கெதிராக நடவடிக்கை கோரி, KEPA சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் 1 லட்சம் கையெழுத்து சேகரிப்புத் திட்டத்தின் கீழ் நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து நிறைவேற்றிட இக்கூட்டத்தில் செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
KEPA அரசுப்பதிவு:
அத்துடன், அண்மையில் முறைப்படி KEPA அரசுப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக (பதிவு எண்: 11/2013) கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பங்கேற்றோர்:
இக்கூட்டத்தில், KEPAவின் துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி மக்கீ நூஹுத்தம்பி, ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், பி.ஏ.ஷேக், ஹாஜி ஏ.எஸ்.புகாரீ, ஹாஜி எம்.ஏ.முஹம்மத் இப்றாஹீம் (48), எஸ்.அப்துல் வாஹித், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் (நகர்மன்ற உறுப்பினர்), செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், சிறப்பழைப்பாளராக சாளை முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, KEPA செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |