எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்களை ஒருங்கிணைத்து செயல்படச் செய்யுமுகமாக, காயல்பட்டணம்.காம் இணையதளம் சார்பில், ‘எழுத்து மேடை மையம்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அறிமுக நிகழ்ச்சி, இம்மாதம் 16ஆம் தேதி சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
காயல்பட்டணம்.காம் எழுத்து மேடை கட்டுரையாளர்களான ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ்., சிறப்புக் கட்டுரையாளர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, எழுத்தாளர் கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காயல்பட்டணம்.காம் செய்தியாளர்களான ஹாஜி எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன், எஸ்.கே.ஸாலிஹ் (நிறுவனர், தாருத்திப்யான் நெட்வர்க்) ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர். காயல்பட்டணம்.காம் இணையதளம் குறித்து அதன் நிர்வாகி எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் அறிமுகவுரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, காயல்பட்டணம்.காம் எழுத்து மேடை பகுதி குறித்தும், சிறப்பு விருந்தினர்கள் குறித்தும் - எழுத்து மேடை கட்டுரையாளர் சாளை பஷீர் ஆரிஃப் அறிமுகவுரையாற்றினார்.
பின்னர், “ஊடகவியலாளனின் சமூக பொறுப்பும், என் அனுபவங்களும்” என்ற தலைப்பில், ஆவணப்பட இயக்குநரும், பூவுலகின் நண்பர்கள் குழுமத்தைச் சேர்ந்தவருமான - சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.ஆர்.சீனிவாசன் உரையாற்றினார்.
அத்துடன் முதல் அமர்வு நிறைவுற்றது. மஃரிப் தொழுகைக்குப் பின் மாலை 06.45 மணிக்கு இரண்டாம் அமர்வு நடைபெற்றது. துவக்கமாக, கவிஞர் ஏ.ஆர்.தாஹா - ஊடகம் குறித்து தான் இயற்றிய கவிதையை வாசித்தார்.
பின்னர், “கருத்து சுதந்திரம் — ஒரு முதிர்ந்த சமூகத்தின் உயிர் மூச்சு” என்ற தலைப்பில், கவிஞரும் - சமூக ஆர்வலரும் - திரைப்பட இயக்குநருமான அமீர் அப்பாஸ் உரையாற்றினார்.
இந்நிகழ்வுகளில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகர்மன்ற உறுப்பினர்களான கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஜெ.அந்தோணி, ஏ.ஹைரிய்யா, காயல்பட்டணம்.காம் இணையதள செய்தி வெளியீட்டாளர் ‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ மாலிக், எழுத்து மேடை கட்டுரையாளர் ஹாஃபிழ் எம்.என்.புகாரீ, இணையதள கருத்தாளர்களான ஹாஜி மக்கீ நூஹுத்தம்பி, ஏ.எல்.நிஜார் அஹ்மத், எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், கத்தீப் முஹம்மத் முஹ்யித்தீன், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் ஷகீல், கவிஞர் நெய்னா உள்ளிட்ட இலக்கிய ஆர்வலர்களும், பொதுநல அமைப்புகள் - ஜமாஅத்துகளின் நிர்வாகிகளும், பொதுநல ஆர்வலர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, நிகழ்விடம் - ரெட் ஸ்டார் சங்கத்தின் அங்கத்தினரான எஸ்.அப்துல் வாஹித், ஆஸாத், பொறியாளர் ஏ.பி.ஷேக், காஸிம், எம்.ஏ.ஜியா, எம்.ஏ.நவ்ஃபல் ரிஸ்வீ, எம்.ஏ.அப்துல் ஜப்பார் ஆகியோரும், ஷஃபீயுல்லாஹ், ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல் மற்றும் ரெட் ஸ்டார் சங்க மாணவர் குழுவினரும் செய்திருந்தனர்.
நிறைவில், சுற்றுச்சூழல் தொடர்பான ஆவணப்படம் அசைபட உருப்பெருக்கி மூலம் மைதானத்தில் திரையிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் அசைபட பதிவுகளைக் காண இங்கே சொடுக்குக!
இந்த எழுத்து மேடை மையம் மூலம், நிழற்படம் எடுப்பதற்கான பயிற்சி, கட்டுரை எழுதுவதற்கான பயிற்சி, ஊடகங்களை பகுப்பாய்வு செய்தல், ஊடகங்களில் வெளியிடுவதற்காக ஆக்கங்களை ஆயத்தம் செய்தல், செய்தி சேகரிப்பு என பல்வேறு தலைப்புகளில் நகரில் தொடர் நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்படும் என கூட்டத்தில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
அசைபடம்:
வீனஸ் ஸ்டூடியோ |