இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பு அமைப்பான காயிதேமில்லத் பேரவை உலகின் பல நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது. கத்தர் நாட்டில் செயல்பட்டு வரும் காயிதேமில்லத் பேரவையின் புதிய தலைவராக காயலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவ்வமைப்பின் செய்தி தொடர்பாளர் கவிமகன் காதர் தெரிவித்துள்ளதாவது:-
கத்தர் காயிதே மில்லத் பேரவையின் செயற்குழுக் கூட்டம், தோஹா கத்தரில் அமைந்துள்ள கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் இல்லத்தில், கடலூர் முஸ்தஃபா தலைமையில் - கவுரவ ஆலோசகர் கே.வி.ஏ.டி.கபீர் முன்னிலையில் இம்மாதம் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது.
பேரவையின் மார்க்க அணிச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை பாக்கவீ இறைமறை வசனங்களையோதி, அனைவரையும் வரவேற்றுப் பேசி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
பின்னர், அமைப்பின் நடப்பு தலைவர் அப்துல்லாஹ், செயலாளர் சம்சுதீன் ஆகிய இருவரும் பணிச்சுமை காரணமாக தங்களது பொறுப்பை பரிபூரணமாக செய்ய முடியாத சூழ்நிலை இருப்பதால், புதிய தலைவரை தேர்ந்தேடுக்குமாறும், பேரவைக்கான தங்களது ஒத்துழைப்பு என்றும்போல் தொடருமென்றும் வேண்டுகோள் வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய கூட்டத் தலைவர் முஸ்தபா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயலாளர் - அண்மையில் காலமான கமுதி பஷீர் அவர்களின் சமுதாயச் சேவை குறித்து நினைவுகூர்ந்து பேசினார்.
தொடர்ந்து சிற்றுரை ஆற்றிய செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் தனது உரையின் நிறைவில், உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று, பேரவையின் புதிய தலைவராக காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத், புதிய செயலாளராக கடலூர் முஸ்தஃபா ஆகியோரின் பெயர்களை முன்மொழிய அனைத்து உறுப்பினர்களும் தக்பீர் முழக்கத்துடன் அதனை வழிமொழிந்தனர். பின்னர், பேரவையின் புதிய தலைவர் ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் ஏற்புரையாற்றினார்.
பின்னர், வரும் வியாழக்கிழமையன்று மீண்டும் கூடி, எஞ்சிய பொறுப்புகளுக்கு தகுதியானவர்களைத் தெரிவு செய்யவும், அண்மையில் காலமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயலாளர் கமுதி பஷீர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு, மறைந்த கமுதி பஷீர் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டதுடன், அவரது பாவப் பிழைபொறுப்பிற்காக பிரார்த்திக்கப்பட்டது.
நிறைவாக, மதுரை முஹம்மத் ரபீக் கமால் நன்றி கூற, மார்க்க அணி இணைச் செயலாளர் ஹாஃபிழ் முஹம்மத் ஸாலிஹ் உமரீயின் துஆ பிரார்த்தனையுடன் கூட்டம் நிறைவுற்றது.
இந்நிகழ்வில், திருநெல்வேலி பேட்டை ஜே.ஃபுர்கான் அலீ, மதுரை முஹம்மத் இஸ்மாஈல், கடையநல்லூர் அப்துல் காதிர் ஆகிய செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, கத்தர் காயிதேமில்லத் பேரவை செய்தி தொடர்பாளர் கவிமகன் காதர் தெரிவித்துள்ளார். |