இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், வரும் ஏப்ரல் மாதம் 02ஆம் தேதியன்று தூத்துக்குடியில் நடத்தப்படும் கவன ஈர்ப்புப் பேரணியில் கலந்துகொள்வதற்காக, காயல்பட்டினத்திலிருந்து 30 வேன்களில் புறப்பட்டுச் செல்வதென அக்கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை அவசர கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளையின் அவசர பொதுக்குழுக் கூட்டம், 24.03.2013 ஞாயிற்றுக்கிழமை இரவு 08.00 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள - கட்சியின் நகர அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதிர் மன்ஸிலில் நடைபெற்றது.
கட்சியின் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் முன்னிலை வகித்தார்.
ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ இறைமறை வசனங்களையோதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப் கூட்ட அறிமுகவுரையாற்றினார்.
நகர பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூற, மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் துஆவுக்குப் பின் ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், ஹாஜி வாவு சித்தீக், மொகுதூம் கண் ஸாஹிப், ஹாஜி எம்.கே.டி.செய்யித் முஹம்மத் அலீ, ஹாஜி பிரபு முஹ்யித்தீன் தம்பி என்ற பிரபுத்தம்பி, ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.கே.மஹ்மூத் சுலைமான், மாவட்ட மாணவர் பேரவை அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், ரியாத் காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் காஜா நவாஸ், நகர துணைச் செயலாளர் ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், எம்.இசட்.சித்தீக், எம்.எல்.ஷேக்னா லெப்பை, மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் நிறைவில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - கவன ஈர்ப்புபு் பேரணிக்கு 30 வேன்களில் புறப்பாடு:
முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு, முழு மதுவிலக்கு, நீண்டகால முஸ்லிம் விசாரணைக் கைதிகள் விடுதலை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, 02.04.2013 அன்று நாடெங்கிலும் மாவட்ட தலைநகரங்களில் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கவன ஈர்ப்புப் பேரணி நடத்தப்படுகிறது. அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் தூத்துக்குடியில் நடத்தப்படவுள்ள பேரணியில் கலந்துகொள்வதற்காக, பேரணி நாளான ஏப்ரல் 02ஆம் தேதி மதியம் 02.00 மணிக்கு, 30 வேன்களில் காயல்பட்டினத்திலிருந்து புறப்பட தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், ஒவ்வொரு வாகனத்திற்கும் பகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அந்தந்தப் பகுதி மக்களை ஒருங்கிணைத்து அழைத்து வர பொறுப்பளிக்கப்பட்டது.
தீர்மானம் 2 - சாலைப்பணியை விரைந்து முடிக்காவிடில் முற்றுகைப் போராட்டம்:
காயல்பட்டினம் 06ஆவது வார்டுக்குட்பட்ட, ஆஸாத் தெரு - சித்தன் தெரு - அம்பல மரைக்காயர் தெரு இணைப்புச் சாலை மற்றும் ஆஸாத் தெரு ஆகிய பகுதிகளில் தார்சாலை அமைப்பதற்காக தோண்டப்பட்டு பல மாதங்களாகியும் இன்று வரை புதிய சாலை அமைக்கப்படவில்லை.
விரைவாக புதிய சாலையை அமைத்திடுமாறு கோரி காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கு கடிதம் அளிப்பதென்றும், இனியும் தாமதித்தால் நகர பொதுமக்களைத் திரட்டி, காயல்பட்டினம் நகராட்சி அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்திடவும் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |